'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்

திண்டுக்கல்




புகாருக்கு தீர்வு; 'தினத்தந்தி'க்கு நன்றி


உத்தமபாளையம் பழைய பைபாஸ் சாலையில் பாலம் கட்டும் பணி நடப்பதால் மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் மாற்றுப்பாதை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதுகுறித்து கடந்த 1-ந்தேதி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி பிரசுரமானது. இதன் எதிரொலியாக தற்போது அந்த பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகாரை உடனடியாக பிரசுரித்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.


-பரசுராமன், உத்தமபாளையம்.


நிறம் மாறிய தண்ணீர்


குஜிலியம்பாறை தாலுகா தி.கூடலூரில் உள்ள குடகனாற்று தண்ணீர் நிறம் மாறியுள்ளது. மேலும் அந்த தண்ணீரில் நுரை பொங்கி வருகிறது. இதனால் தண்ணீரில் ரசாயனம் எதுவும் கலந்திருக்குமோ? என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். எனவே குடகனாற்றில் தண்ணீர் நிறம் மாறியது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.


-சண்முகம், தி.கூடலூர்.


சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்


ஒட்டன்சத்திரம் கஸ்தூரி நகரில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கும் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-பொதுமக்கள், கஸ்தூரிநகர்.


கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம்


திண்டுக்கல் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்குள்ள கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-ஜெரால்டு, வக்கம்பட்டி.


குப்பையால் சுகாதாரக்கேடு


பட்டிவீரன்பட்டி காந்திபுரம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் சேகரமாகும் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. இதனால் குப்பை தொட்டியில் குப்பைகள் குவிந்து கிடப்பதுடன் சாலையிலும் சிதறிக்கிடக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-கிராம மக்கள், காந்திபுரம்.


சாக்கடை கால்வாய் சேதம்


நாகல்நகர் சீனிராவுத்தர் தெருவில் உள்ள சாக்கடை கால்வாய் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே சேதமடைந்த சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும்.


-வசந்த், திண்டுக்கல்.


பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம்


கடமலைக்குண்டுவை அடுத்த குமணன்தொழு கிராமத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் பயன்பாடு இன்றி பூட்டி கிடக்கிறது. இதனால் அப்பகுதி பெண்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சுகாதார வளாகத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.


-முருகன், குமணன்தொழு.


சாலை அமைக்க வேண்டும்


தேனியை அடுத்த ஆண்டிப்பட்டி ஸ்ரீனிவாசா நகரில் தார்சாலை அமைக்கும் பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண் பரப்பப்பட்டது. ஆனால் அதன் பிறகு அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அந்த சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை பணியை விரைவில் தொடங்க வேண்டும்.


-தவசிலிங்கம், ஆண்டிப்பட்டி.


குளம்போல் தேங்கும் கழிவுநீர்


சின்னமனூரை அடுத்த அழகாபுரியில் சாக்கடை கால்வாய் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து அப்பகுதியிலேயே குளம் போல் தேங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-ரவி, அப்பிப்பட்டி.


இரவில் ஒளிரும் பட்டை ஒட்ட வேண்டும்


தேனி பங்களாமேடு, பூதிப்புரம் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் ரவுண்டானா அமைந்துள்ளது. இந்த ரவுண்டானா சுவற்றில் போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் ரவுண்டானா இருப்பது தெரியாமல் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதிகளில் போஸ்டர் ஒட்டுவதை தடுத்து நிறுத்தி, அங்கு இரவில் ஒளிரும் பட்டைகளை ஒட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-விக்னேஷ், தேனி.


நோய்தொற்று பரவும் அபாயம்


தேனி அருகே குன்னூரில் தெற்கு பகுதியில் உள்ள தெருக்களில் இருந்து கழிவுநீர் வெளியேற வழியின்றி தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் வெளியேற தேவையான வடிகால் வசதிகள் செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-பாபு, தேனி.



Next Story