'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?

நெல்லையில் இருந்து அம்பை செல்லும் சாலையில் பிராஞ்சேரி அருகே சாலையோரத்தில் பட்டுபோன மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் காற்றின் வேகம் காரணமாக முறிந்து விழும் நிலையில் உள்ளது. அவ்வாறு விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கார்த்திக், அம்பை.

பகலில் எரியும் தெருவிளக்குகள்

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து காமநேரியில் சில தெருவிளக்குகள் பகலிலும் தொடர்ந்து எரிகின்றன. தொடர்ந்து பல வாரங்களாக இவ்வாறு எரிகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, இரவில் மட்டும் தெருவிளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

சாலையின் நடுவே மின்கம்பம்

பாளையங்கோட்டையில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி சமாதானபுரத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரில் உள்ள மின்கம்பத்தை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சாலையின் நடுவே மின்கம்பம் அமைந்து இருப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக மின்கம்பத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

ஜமால், பாளையங்கோட்டை.

கூடுதல் பணியாளர்கள் அவசியம்

சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரியில் மருந்து, மாத்திரைகள் கொடுப்பதற்கு போதிய பணியாளர்கள் இல்லை. எனவே, கூடுதல் பணியாளர்கள் நியமித்து, உரிய மருத்துவ வசதி கிடைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முப்பிடாதி முத்து, சேரன்மாதேவி.

புதர்கள் நிறைந்த சுடுகாட்டு பாதை

திருவேங்கடநாதபுரம் பஞ்சாயத்து பாடகசாலை கிராமத்தில் சுடுகாட்டு பாதையில் முள்செடிகள் அடர்ந்து வளர்ந்து புதர்கள் மண்டிக் கிடக்கிறது. இதனால் சடலங்களை கொண்டு செல்லும்போது சிரமம் ஏற்படுகிறது. எனவே, பாதையை சீரமைத்துக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

வள்ளிநாயகம், பாடகசாலை.

பள்ளிக்கூட கட்டிடம் சீரமைக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி தலைவன்வடலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் சிதிலமடைந்ததால் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே, பள்ளிக்கட்டிடத்தை சீரமைத்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சிவசங்கர், தலைவன்வடலி.

பஸ் வசதி

நெல்லையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் அதிகாலையில் 4.20 மணி மற்றும் 4.40 மணிக்கு சாத்தான்குளம் வழியாக குட்டம் மற்றும் உடன்குடி செல்லும் பஸ்கள் சரியாக இயக்கப்படுவதில்லை. இதனால் மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, பேய்க்குளம், சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே, அந்த பஸ்சை முறையாக இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

அய்யப்பன், சாத்தான்குளம்.

ஆபத்தான மின்கம்பம்

எட்டயபுரம் அருகே கான்சாபுரத்தில் இருந்து கடலையூர் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பம் ஒன்று, சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. சிறுவர்கள் நடமாடும் பகுதியாக இருப்பதால் அந்த ஆபத்தான மின்கம்பத்தை மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரி கணேஷ், எட்டயபுரம்.

போக்குவரத்துக்கு இடையூறான அடிபம்பு

கோவில்பட்டி புதுகிராமம் செல்லும் வழியில் பள்ளிவாசல் முதல் தெருவில் அடிபம்பு ஒன்று பல மாதங்களாக பராமரிப்பின்றி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே, அடிபம்பை அப்புறப்படுத்தி சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

பாலமுருகன், கோவில்பட்டி.

அபாய நிலையில் மின்மாற்றி

வல்லநாடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வெள்ளையத்தேவன் மணி மண்டபம் எதிரே மின்மாற்றி ஒன்று உள்ளது. அந்த மின்மாற்றியின் கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து மிகவும் அபாய நிலையில் உள்ளது. எனவே, இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேசன், வசவப்பபுரம்.

சுத்தப்படுத்தப்படாத சுகாதார வளாகம்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பஸ்நிலையத்தில் பொது சுகாதார வளாகம் ஒன்று உள்ளது. இங்கு சரியாக சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. அதன் வெளிப்பகுதியும் குப்பை மேடுகளாக காட்சியளிக்கிறது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சுகாதார வளாகத்தை சுத்தப்படுத்தி, தண்ணீர் வசதி செய்து கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

முருகன், ஆவுடையானூர்.

தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்

கடையநல்லூர் தாலுகா பாம்புகோவில் பஞ்சாயத்து பகுதியில் இருந்து பெரியசாமிபுரம் செல்லும் சாலையில் வெள்ளை மடத்து விநாயகர் கோவில் முன்பு விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் ஓடை உள்ளது. அந்த ஓடையின் தடுப்புச்சுவர் பலம் இழந்து காணப்படுகிறது. மேலும், அதையொட்டி மிகவும் பள்ளமாக காணப்படுவதால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தவறி விழ வாய்ப்புள்ளது. எனவே, ஓடையின் தடுப்புச்சுவரை சீரமைத்து, ரோட்டின் ஓரம் தடுப்புச்சுவரும் கட்டிக் கொடுப்பதற்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுசூதனன், பெரியசாமிபுரம்.

பணியாளர் இல்லாத அங்கன்வாடி

ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி செங்காநல்லூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு போதிய பணியாளர்கள் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

கணேசன், செங்காநல்லூர்.

குண்டும் குழியுமான சாலை

கடையம் ஒன்றியம் பொட்டல்புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 9-வது வார்டு ஆத்தங்கரை தெரு பகுதிகள் முழுவதும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் தெருவிளக்குகளும் சரிவர எரிவதில்லை. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகமது, பொட்டல்புதூர்.

* ஆலங்குளத்தில் இருந்து நெட்டூர் செல்லும் மார்க்கெட் சாலை மிகவும் மோசமாக உள்ளது. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே, சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

சந்திரசேகரன், ஆலங்குளம்.


Next Story