தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான குடிநீர் தொட்டி
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நகரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இங்குள்ள தேரோடும் வீதியில் கொத்தமங்கலம் செல்லும் சாலை ஓரத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி சிமெண்டு தூண்கள் உடைந்து ஆபத்தான நிலையில் தண்ணீர் ஏற்றப்படுகிறது. தண்ணீர் ஏற்றப்படும் போது அதிக எடையின் காரணமாக உடைந்து விழும் அபாயம் உள்ளது. போக்குவரத்து அதிகமுள்ள சாலை ஓரத்தில் ஆபத்தான தண்ணீர் தொட்டி உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். ஆகவே ஆபத்தான நீர்தேக்கத் தொட்டியை அகற்றி புதிய குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரமங்கலம்.
அரசு மருத்துவமனையை ஆக்கிரமத்துள்ள செடி, கொடிகள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மருத்துவமனை வளாகத்தை சுற்றி ஏராளமான சீமை கருவேலமரங்கள் மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷபூச்சுகள் மருத்துவமனை வளாக்தை சுற்றிவருகிறது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், ஆலங்குடி.
பஸ்கள் நின்று செல்ல வேண்டுகோள்
புதுக்கோட்டை மாவட்டம், பாலன் நகர் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் வழியாக செல்லும் பஸ்கள் எதுவும் நின்று செல்வதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைகளுக்கு செல்லும் பொதுக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொதுமக்கள், புதுக்கோட்டை
பாழடைந்த குடியிருப்புகள்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் தங்குவதற்கு என்று குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவர்கள் மற்றும் மருத்துவதுறை அலுவலர்கள் குடியிருந்து வந்தனர். தற்போது இந்த குடியிருப்புகளில் யாரும் குடி இல்லாமல் பாழடைந்து உள்ளது. இதனை புதுப்பித்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் தங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருவரங்குளம்.
பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பஸ் நிலையம் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மொய் விருந்து, திருமணம், காதணி விழா பதாகைகள், அரசியல் பதாகைகள் வைத்ததால் பிரச்சினைகள் ஏற்பட்டதால் அதன் பிறகு பதாகைகள் வைக்க தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் பஸ் நிலையம் பகுதியில் வரிசையாக ஆபத்தான நிலையில் பதாகைகள் வைக்க தொடங்கியுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆபத்துகளை ஏற்படுத்தும் பதாகைகள் வைப்பதை பேரூராட்சி நிர்வாகம் தடைவிதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரமங்கலம்.