தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

சேதமடைந்த வடிகால் மதகு

அரியலூர் மாவட்டம், முத்துசேர்வாமடம் ஊராட்சி, ரெட்டிபாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் உபரிநீர் செல்லும் வடிகால் மதகு 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது மழை காலம் தொடங்க உள்ளதால் சேதமடைந்த வடிகால் மதகை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், ரெட்டிபாளையம்.


கடைவீதியில் சுற்றித்திரியும் பன்றிகள்

அரியலூர் மாவட்டம், செந்துறை கடைவீதியில் நாள்தோறும் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், கடைக்காரர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செந்துறை.

தரைப்பாலம் சரிசெய்யப்படுமா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், கல்லாத்தூர் ஊராட்சியில் கடந்த ஓராண்டு முன்பு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் தடுப்பணையில் தரைப்பாலம் கட்டப்பட்டது. தற்போது தரைப்பாலம் சேதமடைந்து உள்ளது. இதனால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கல்லாத்தூர்.

ஒலிப்பெருக்கியை பயன்படுத்த கோரிக்கை

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி வழியாக தினமும் அதிகளவில் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முட்டுவாஞ்சேரி சாலையில் புற காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கிருந்து ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் வாகன ஓட்டிகளை எச்சரித்து வந்தனர். தற்போது ஒலிப்பெருக்கி பயன்படுத்தாமல் காட்சி பொருளாக இருக்கிறது. இதனால் வி.கைகாட்டி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக கனரக வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வி.கைகாட்டி.


Next Story