'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

கன்னியாகுமரி-தூத்துக்குடி கடற்கரை சாலையில் ராதாபுரம் தாலுகா தோட்டவிளை அருகில் நம்பியாற்று பாலத்தின் மேற்கு பகுதியில் வேகத்தடை இல்லாமல் அறிவிப்பு பலகை மட்டும் இருப்பதாகவும், இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படுவதாகவும் ஆவுடையாள்புரத்ைத சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக அங்கிருந்த அறிவிப்பு பலகை அகற்றப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

பயணிகள் நிழற்கூடம் அமையுமா?

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் எதிரில் பஸ் நிறுத்தம் உள்ளது. நெல்லை, நாகர்கோவில் மார்க்கமாக செல்லும் பயணிகள் இங்கு நின்று தான் பஸ் ஏறி சென்று வருகிறார்கள். ஆனால், இங்கு பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியோர் என்று அனைவரும் மழை, வெயிலில் நின்று பஸ் ஏறி சென்று வரும் நிலை உள்ளது. எனவே, உரிய இடத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- முத்துகுமார், கல்லிடைக்குறிச்சி.

குடிநீர் வேண்டும்

சேரன்மாதேவி தாலுகா வேலியார்குளம், திருவிருத்தான்புள்ளி ஊர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதில் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்துதர வேண்டுகிறேன்.

- செல்வராஜ், வேலியார்குளம்.

புகாருக்கு உடனடி தீர்வு

நெல்லை அருகே உள்ள கீழநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள இ.டபிள்யூ.எஸ். குடியிருப்பு பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை என்றும், இதனால் பொதுமக்கள் அச்சப்படுவதாகவும் பாளையங்கோட்டையை சேர்ந்த ஈனமுத்து என்பவர் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுமானது. இதற்கு உடனடி தீர்வாக தற்போது தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுமா?

களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோவில்பத்தில் நாங்குநேரியான் கால்வாய் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் ஓரத்தில் இரும்பு தடுப்புகள் இல்லாமல் உள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமானவர்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பாக இரும்பு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- விஜய், களக்காடு.

காட்சிப்பொருளான நீர்த்தேக்க தொட்டி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா நடுவக்குறிச்சி கிராமத்துக்கு உட்பட்ட வடக்கு ராமசாமிபுரத்தில் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அந்த நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டில் இல்லாமல் வெறும் காட்சிப்பொருளாகவே உள்ளது. அதை அதிகாரிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், பொதுமக்கள் பெரிதும் பயன் அடைவர்.

- ஜேசுகோபின், பிரகாசபுரம்.

நோய் பரவும் அபாயம்

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருமால்நகர், திருப்பதி நகர், கணேஷ்நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் ஆங்காங்கே தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. மேலும், வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் எளிதாக செல்ல முடியாததால், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, வாறுகால் அடைப்புகளை சரிசெய்து கழிவுநீர் வெளியேற அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- பாலமுருகன், கோவில்பட்டி.

போக்குவரத்துக்கு இடையூறு

காயல்பட்டினம் காயிதே மில்லத் நகரில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த மின்கம்பத்தை சாலையோரமாக மாற்றி அமைக்காததால், தற்போது சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளது. வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

- அப்துல்காதர், காயல்பட்டினம்.

மின்கம்பம் மாற்றப்படுமா?

ஆத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தலைவன்வடலி கிராமத்தில் உள்ள மின்கம்பம் அடிப்பகுதி முற்றிலும் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. விபரீதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பு அந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?

- நாராயணபெருமாள், தலைவன்வடலி.

ஆபத்தான பள்ளம்

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் இருந்து தென்றல்நகர் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் மீது போடப்பட்டுள்ள சிலாப் உடைந்து, ஆபத்தான பள்ளமாக காணப்படுகிறது. அந்த சாலை வழியாக தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். மழை காலத்தில் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கும் பட்சத்தில், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் அதை சரிசெய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- வேம்புராஜ், தூத்துக்குடி.

தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்டது சிவகாமிபுரம். இந்த ஊரில் சொரி நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை கடித்தால் என்ன ஆகுமோ? என்ற அச்சத்துடன் பொதுமக்கள் வெளியே சென்று வருகின்றனர். எனவே அந்த நாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- முத்து, சிவகாமிபுரம்.

குடிநீர் கிடைக்குமா?

சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி திருச்சிற்றம்பலம் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லை. மேலும் தென்காசியில் இருந்து சுரண்ைட செல்லும் அரசு பஸ், திருச்சிற்றம்பலம் ஊருக்குள் வராமல் செல்கிறது. எனவே, குடிநீர் வசதி செய்து தரவும், அரசு பஸ் ஊருக்குள் வந்து செல்லவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- ஹரேஷ்குமார், திருச்சிற்றம்பலம்.

கால்வாயை தூர்வார வேண்டும்

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமம் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், கருப்பாநதி அணையில் இருந்து கால்வாய் மூலம் வரும் தண்ணீரால் பாசன வசதி பெறுகிறது. எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, தண்ணீர் எளிதாக வரும் வகையில் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- கே.எஸ்.கணேசன், கீழக்கலங்கல்.

வாறுகால் முழுமையாக அமைக்கப்படுமா?

திருவேங்கடம் தாலுகா செவல்குளம் பஞ்சாயத்து கோபாலகிருஷ்ணபுரம் வடக்கு காலனி பகுதியில் வாறுகால் அமைக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, வாறுகாலை முழுமையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- காளிராஜ், கோபாலகிருஷ்ணபுரம்.

பயணிகள் நிழற்கூடம் தேவை

கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் அருகில் பயணிகள் நிழற்கூடம் இருந்தது. அது பழுதடைந்து இருந்ததால் அகற்றினர். பின்னர் அங்கு புதிதாக நிழற்கூடம் அமைக்காததால், பயணிகள் மழையிலும், வெயிலிலும் நின்று பஸ் ஏறி சென்று வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, அங்கு புதிய நிழற்கூடம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.


Next Story