தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

குடிநீர் தட்டுப்பாடு

பெரம்பலூர் மாவட்டம், புதுவேட்டக்குடி கிராம் ஆதிதிராவிடர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கொஞ்சம் கிடைக்கும் தண்ணீரும் உப்பாக வருகிறது. மேலும் சில நேரங்களில் கழிவுநீரும் சேர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள்,புதுவேட்டக்குடி

கூடுதல் மின்கம்பங்கள் வைக்க கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட புதுவேட்டக்குடி ஆதித்திராவிடர் மேற்கு பகுதியில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்து அதிகமான மின் இணைப்புகள் அப்பகுதியில் வீடுகளுக்கு செல்கிறது. இதனால் அடிக்கடி அப்பகுதி மின்வினியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மின் இணைப்புகளால் அசாம்வித சம்பவங்களும் நடைபெறு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கூடுதல் மின்கம்பங்கள் நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள்,குன்னம்.


வேகத்தடை வேண்டும்

பெரம்பலூர் நகரப்பகுதியில் உள்ள வெங்கடேசபுரத்தில் சாலையில் செல்லும் வாகனங்கள் அதிக வேகமாக செல்கிறது. இதனால் இப்பகுதியில் தினமும் 3-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்கவே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மணிகண்டபிரபு, பெரம்பலூர்.

விபத்தை ஏற்படுத்தும் சாலை

பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி காமராஜர் வளைவு வரை உள்ள தார்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது, இதனால் இருசக்கர வாகனங்கள் முதல் அனைத்து வகையான வாகனங்களும் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது, மேலும் மழைக் காலங்களில் குழிகள் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து அவ்வபோது விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சத்தியசீலன், பெரம்பலூர்.

குப்பைகளை முறையாக வாங்க வேண்டும்

பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் குப்பைகள் வாங்க தூய்மை காவலர்கள் வராததாலும், குப்பை தொட்டிகள் இல்லாததால் பொதுமக்கள் தெருவில் ஆங்காங்கே குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் காற்றில் பறக்கும் குப்பைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் குப்பைகள் முறையாக வாங்குவதற்கும், அள்ளுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், எளம்பலூர்.


Next Story