தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள சின்னான்கோன் விடுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த சமத்துவபுரத்தில் சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இங்குள்ள பெரியார் சிலை பராமரிக்கப்படாமல் உள்ளது. சிலையின் பீடம் உடைந்து பெயர்ந்து போய் உள்ளது. மேலும் விளையாட்டு மைதானம், சுகாதார மையம் போன்றவை பராமரிக்கப்படாமல் உள்ளன. எனவே இந்த சமத்துவபுரம் பகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சின்னான்கோன் விடுதி.
ஆபத்தான மின்கம்பம்
புதுக்கோட்டை நகராட்சி பாரதிநகரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் பின்புறம் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்தமின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த மின்கம்பம் விழுந்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.
அங்கான்வாடி கட்டிடம் சீரமைக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி டி.இஎல்.சி. சாலையில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு தினமும் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர். இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆஸ்பெட்டாஸ் கூரை போடப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. கட்டிடம் மிகவும் பழுதடைந்த ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பெற்றோர்கள் அச்சத்துடனேயே இந்த மையத்தில் குழந்தைகளை விட்டுச் செல்கின்றனர். எனவே ஆபத்தான இந்த அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு அங்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் .
பொதுமக்கள், கறம்பக்குடி
வாரச்சந்தைக்கு நிரந்தர கட்டிடம் தேவை
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முக்கண்ணாமலைப்பட்டி -புதூர் மற்றும் முக்கண்ணாமலைப்பட்டி- வவ்வாநேரி இணைப்பு சாலையில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை தொடங்கப்பட்டது. இந்தநிலையில் முக்கண்ணாமலைப்பட்டியை சுற்றி பல்வேறு கிராமங்கள் இருப்பதால் நாளடைவில் வாரச்சந்தை சூடுபிடிக்க தொடங்கியது கடைகளும் அதிக அளவு வருவதால் சந்தை நடக்க போதிய இடம் இல்லாததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாரச்சந்தை கடைகளை உருவாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், முக்கண்ணாமலைப்பட்டி.
தெருநாய்கள் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் முதியவர்கள், குழந்தைகள் தெருக்களில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரமங்கலம்.