தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மந்தமாக நடைபெறும் சாலை பணி
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பூவாளூர் அம்பேத்கர் தெரு மற்றும் காலனி 3 மற்றும் 4-வது வார்டு பகுதியில் ஏாளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் மேற்கண்ட பகுதிகளில் கடந்த 6 மாத காலங்களுக்கு முன்பு புதிதாக சாலை போடுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு அப்படியே விட்டு விட்டனர். இதனால் சாலைகளில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், லால்குடி.
சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனை
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், த.முருங்கப்பட்டியில் மாநில நெடுஞ்சாலை ஓரமாக அரசு டாஸ்மாக்கடை செயல் வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த கடை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் அதே இடத்தில் மீண்டும் பகல் மற்றும் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவிகள் அஞ்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சட்டவிரோதமாக செயல்படும் மது விற்பனையை தடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள் த.முருங்கப்பட்டி.
நாய்கள் தொல்லை
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், ஆமூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. இந்த நாய்களில் தெருவில் நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை கடிக்க பாய்கிறது. மேலும், வாகனங்களில் செல்வோரை பின்னால் சென்று துரத்துகிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், ஆமூர்.
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், முருங்கை பஞ்சாயத்து புதுப்பாளையம் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் பற்றாக்குறையால் சரியாக வரவில்லை. இதனால் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கடந்த 15-ந்தேதி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிக்கு குடிநீர் வினியோகம் வழங்கினர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், புதுப்பாளையம்.