தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
அரியலூர் மாவட்டம், முனியங்குறிச்சி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் முதன்மை சாலையில் அமைந்துள்ளது. இந்தநிலையில் முதன்மை சாலை வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக மேற்கண்ட 3 பள்ளிகள் செயல்படும் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடை அமைத்துள்ளனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள், முனியங்குறிச்சி.
குண்டும், குழியுமான சாலை
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், குருவாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட குருவாடி மெயின் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் 4 சக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆகி விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
தனபால், குருவாடி.
பொது கழிவறை கட்டப்படுமா?
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட 30 மேற்க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தினமும் செந்துறை பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால் செந்துறை பஸ் நிலையத்தில் எந்த இடத்திலும் பொது கழிவறை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே செந்துறை பஸ் நிலையத்தில் பொது கழிவறை கட்டி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், செந்துறை.
குரங்குகள் தொல்லை
அரியலூர் மாவட்டம் கீழ கொளத்தூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து திண்டபங்கள், காய்கறிகளை ஆகியவற்றை எடுத்து சென்று வருகிறது. மேலும் சாலைகளில் நடந்து செல்வோரை கடிக்க பாய்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்ந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கீழகொளத்தூர்.
பழுதடைந்த மின் மோட்டார்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வெற்றியூர் கிராமம், மேட்டுத்தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மின் மோட்டார் ஒன்று பழுதடைந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இதனால் தரைதொட்டியில் தண்ணீர் ஏற்றப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும் தண்ணீர் வசதி இல்லாமல் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
பொதுமக்கள், வெற்றியூர்.