தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள்
கரூர் மாவட்டம், குளித்தலை சபாபதி நாடார் தெரு பகுதியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே செல்லும் தென்கரை வாய்க்காலில் பொதுமக்கள் துணிகளை துவைத்து குளிக்கும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த படிக்கட்டு பகுதியில் வாய்க்கால் தண்ணீரில் அதிக அளவிலான செடிகள் முளைத்துள்ளன. இதன் காரணமாக இங்கு பொதுமக்கள் குளிக்க முடியாதநிலை உள்ளது. எனவே இந்த செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், குளித்தலை.
பழுதடைந்த ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம்
கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியில் கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இந்தநிலையில் சுகாதார நிலையத்தின் கட்டிடங்கள் பழுதடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறைக்கு பலமுறை புகார் கடிதம் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நொய்யல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் சுமார் 6 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதிக்கும், ஓலப்பாளையம் பகுதிக்கும் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், நொய்யல்.
சேதமடைந்த குடிநீர் தொட்டி
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பஞ்சப்பட்டி பஸ் நிலையத்திற்கு தினமும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து இங்கிருந்து கரூர், திருச்சி, தரகம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்களில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பஸ் நிலைய பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து காட்சி பொருளாக இருக்கிறது. இதனால் பயணிகள் தாகம் தீர்க்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் தொட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பஞ்சப்பட்டி.
குவிந்து கிடக்கும் கழிவுகள்
கரூர் மாவட்டம், நடையனூர் பகுதியில் தார் சாலையோரங்களில் பல்வேறு கழிவு பொருட்கள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்களில் சில நேரங்களில் சாலையோரம் செல்லும்போது விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், நடையனூர்.
ஆபத்தான மின்கம்பம்
கரூர் மாவட்டம், நாணப்பரப்பு பிரிவு சாலை அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டுகள் பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், நாணப்பரப்பு.