தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள திருக்கட்டளை ஊராட்சி அரசு ஆரம்ப பள்ளி சுற்றுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி எதிரொலியாக திருக்கட்டளை ஊராட்சி நிர்வாகத்தினர் சுற்றுச்சுவரை கட்டி சரிசெய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்தினருக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், திருவரங்குளம்.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருந்து கூத்தாடிவயல், மூக்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலை கடந்த 20 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்வே சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், அறந்தாங்கி.

புதர்மண்டி காட்சியளிக்கும் குளங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே அனவயல், எல்.என்.புரம், ஆண்டவராயபுரம், செட்டியேந்தல் பகுதிகளில் உள்ள குளங்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது பருவ மழை தொடங்க உள்ளதால் குளத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி மழைநீரை சேமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

பொதுமக்கள், வடகாடு.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சி வார்டு எண் 5 -ல் பழைய கடைவீதி தெருவில் சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் தெருவின் மையப்பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், அன்னவாசல்.

மயான கொட்டகைக்கு தண்ணீர் வசதி வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் துவார் கிராமத்தில் கீழப்பட்டி, கல்லுப்பட்டி , புளக்கடைபட்டி ஆகிய பகுதியை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கான மயானம் பாதை வசதி இல்லாமல் சுமார் 10 அடி சாலையை விட்டு பள்ளமாக உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பால் மயானம் செல்லவே மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சாலையை உயர்த்தி மயான கொட்டகை அமைத்து தண்ணீர் வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெங்கராஜன், துவார்.


Next Story