தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

கரூர் மாவட்டம், குளித்தலை ஆண்டார் மெயின் ரோடு தெருவில் இருந்து காங்கிரஸ் ரோடு தெருவிற்கு செல்லும் முகப்பு பகுதியில் கழிவு நீர் சாக்கடையின் மேல் பகுதி சிமெண்டு பலகை மற்றும் கான்கிரீட்டால் மூடப்பட்டிருந்த ஒரு பகுதி உடைந்து விட்டது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியின் எதிரொலியாக சேதமடைந்த சிமெண்டு பலகையின் உடைந்த பகுதி சரி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

பொதுமக்கள், குளித்தலை.

புதிய பஸ் நிலையம் வேண்டும்

கரூர் மாவட்டம், குளித்தலையில் தற்போது இயங்கி வரும் பஸ் நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் மட்டுமே நிற்கும் வகையில் உள்ளது. இதனால் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்தின் உள்ளே வராமல், வெளியிலேயே பயணிகளை இறக்கி, ஏற்றி வருகின்றன. திருச்சி மார்க்கம் மற்றும் கரூர் மார்க்கத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பஸ்களும், மணப்பாறை, முசிறி மார்க்கத்திலும் நூற்றுக்கணக்கான பஸ்களும் இந்த பஸ் நிலையத்தில் இருந்து சென்று வருகின்றன. இதனால் பயணிகள் ஒதுங்கி நிற்கக்கூட இடமின்றி கடை வாசல்களில் நிற்கின்றனர். எனவே, அனைத்து வசதிகளும் கொண்ட புதிய பஸ் நிலையம் குளித்தலையில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சுந்தர், குளித்தலை.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

கரூர் மாவட்டம், பள்ளபாளையம் ராஜவாய்க்கால் 44 கிலோ மீட்டர் செல்கிறது. இதனால் விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக இந்த வாய்க்கால் விளங்கி வருகிறது. தற்போது ராஜவாய்க்கால் செல்லும் ஆண்டான் கோவில் கிழக்கு, மேற்கு, திருக்காம்புலியூர் எல்.என்.எஸ். பகுதிகளில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ராஜவாய்காலில் தண்ணீர் செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடடிக்கை எடுக்க வேண்டு்ம என கேட்டுக் கொள்கிறோம்.

தாமரைக்கனி, கரூர்.

சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் உள்ள தாராபுரம் ரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிக்காக குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது அப்பணி விட்டு, விட்டு மெதுவாக நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிலை தடுமாறி குழிக்குள் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், அரவக்குறிச்சி.

ஆபத்தான மின்கம்பம்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள புத்தூர்-ஆலத்தூர் செல்லும் சாலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தோகைமலை.


Next Story