தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

மயானபாதை ஆக்கிரமிப்பு

புதுக்கோட்டை மாவட்டம். விராலிமலை தாலுகா, தென்னம்படி கிராமம் கூத்தகுடி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்கள் யாரேனும் இறந்தால் சாலை வழியாக கொண்டு சென்று அப்பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மயானத்திற்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிமிப்பு செய்து வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

செல்வம், கூத்தகுடி.

குடிநீர் பற்றாக்குறையால் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா, பொன்பேத்தி பஞ்சாயத்து, பேரானூர் கிராமத்தில் சரியான குடிநீர் குழாய் இல்லை. இதனால் தினமும் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீரை காசு கொடுத்து வாங்கி பருகும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பேரானூர்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பஸ் நிலையம் மற்றும் காசிம்புதுப்பேட்டை பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு அதில் வெள்ளை வர்ணம் பூசாமல் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசி நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

பொதுமக்கள், காசிம்புதுப்பேட்டை.

சாலைக்கு ஏற்றவாறு பாலங்கள் அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வழியாகச் செல்லும் தஞ்சாவூர் - சாயல்குடி மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் ஆங்காங்கே நடந்து வருகிறது. சாலை விரிவாக்கத்தின் போது பல சிறிய பாலங்களும் மாற்றி அமைக்கப்படுகிறது. பல இடங்களில் அந்தப் பாலங்களைவிட தார் சாலை கீழேயும் அல்லது சற்று உயரமாகவும் அமைக்கப்படுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதே போல காசிம்புதுப்பேட்டை அருகே சாலை விரிவாக்கப்பணிகள் முடிந்துள்ள நிலையில் பாலத்தில் இருந்து வாகனங்கள் குதித்து ஏறுவது போல உள்ளதால் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி செல்கின்றனர். ஆகவே பாலம் மற்றும் தார்ச்சாலை சம அளவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கீரமங்கலம்.

சாலையின் நடுவே ஆபத்தான மின்கம்பம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சிக்குட்பட்ட காஞ்சில் பழனி தெரு 5-வது வார்டில் சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன்பு அந்த மின்கம்பத்தை மற்றொரு இடத்தில் மாற்றி நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், அரிமளம்.


Next Story