தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா?

கரூர் மாவட்டம், சேமங்கி எம்ஜிஆர் நகர் மற்றும் செல்வநகர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்களின் நலன் கருதி சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் இந்த சுகாதார வளாகத்தில் குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு பழுதடைந்து கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது .இதன் காரணமாக சுகாதார வளாகத்தை ஊராட்சி நிர்வாகத்தினர் பூட்டி விட்டனர். இந்நிலையில் இதுவரை சுகாதார வளாகத்தை சீரமைத்து திறக்கப்படவில்லை. இந்த பகுதியை சேர்ந்த மது பிரியர்கள் இந்த சுகாதார வளாகத்தின் அருகே அமர்ந்து மது அருந்திவிட்டு மது பாட்டில்களை உடைத்து அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், சேமங்கி.

சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களிலும் ஏராளமான சீமை கருவேல மரங்கள் முளைத்து உள்ளது. இது அதிக அளவில் ,பெரிய அளவில் முளைத்துள்ளது. இந்த சீம கருவேலமரங்களில் உள்ள சீம கருவேல காய்களை கால்நடைகள் சாப்பிட்டால் அந்த கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்படக்கூடிய அபாய நிலை உள்ளது. அதேபோல் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் முளைத்துள்ளதால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிணறுகளில் உள்ள நீரின் அளவு மிகவும் குறைந்து வரக்கூடிய சூழ்நிலையும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், வேட்டமங்கலம்.

மயில்களால் தொல்லை

கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் ,சோளம், மக்காச்சோளம் ,கேழ்வரகு ,கம்பு உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை விவசாயிகள் பயிர்செய்துள்ளனர். இந்நிலையில் இந்த பகுதிகளில் சுற்றித்திரியும் மயில்கள் தானியங்களையும், பயிர் வகைகளையும் கொத்தி நாசப்படுத்தி வருகிறது .இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே வனத்துறையினர் மயில்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், நொய்யல்.

பஸ்கள் இயக்க கோரிக்கை

கரூர் மாவட்டம் வடுகபட்டி, ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லி கோவில்,கொங்கு நகர் மற்றும் இந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் , மாணவ, மாணவிகள், டெக்ஸ் தொழிலாளர்களுக்கு பலரும் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வந்து கொண்டிருக்கின்றனர். இந்தபகுதியில் பஸ்கள் இயக்கப்படாததால் புன்னம்சத்திரம் மற்றும் நத்தமேடு பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து பஸ்களில் ஏறி சென்று வரவேண்டிய சூழ்நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குந்தாணிபாளையம் நத்தமேட்டில் இருந்து வடுகபட்டி, நல்லிக்கோயில், கொங்கு நகர் வழியாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வடுகபட்டி.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் இருந்து புகழூர் காகித ஆலை வழியாக புன்னம் சத்திரம் செல்வதற்காக தார் சாலை போடப்பட்டுள்ளது. இதில் காகித ஆலை பேரூராட்சி அலுவலகம் முதல் புது குறுக்கு பாளையம் வரை நெடுகிலும் குண்டும், குழியுமாக உள்ளது. அதேபோல் தேவையற்ற முறையில் காகித ஆலை நெடுகிலும் தார் சாலையின் குறுக்கே ஆங்காங்கே ஏராளாமான வேகத்தடை போடப்பட்டு வெள்ளை நிறம் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் அந்த இடங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புகழூர்.


Next Story