தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

குளத்தின் படிக்கட்டுகள் சீரமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் தெப்பக்குளமான திருக்குளம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குளித்தும், துணிகளை துவைத்து பயன்படுத்தி வருகின்றனர். கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களும் அதிக அளவில் வந்து நீராடிச் செல்கின்றன. தற்போது குளத்தின் படித்துறைகளில் பாசிபடந்து காணப்படுவதால் குளிக்க வரும் பொதுமக்கள் தவறி விழுந்து வருகின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் உள்ள பாசிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், திருவரங்குளம்

பஸ் வசதி வேண்டும்

புதுக்கோட்டையில் இருந்து முக்கண்ணாமலைப்பட்டி வழியாக இலுப்பூருக்கு இரவு நேர பஸ்கள் இயங்கி வந்தது. இந்தநிலையில் கொரோனா காலத்தில் அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டது. தற்பொழுது கொரோனா கட்டுபாடுகள் நீங்கி சகஜநிலமைக்கு திரும்பும் இரவு நேர பஸ்கள் இயங்கவில்லை. இதனால் நிறுத்தப்பட்ட தடம் எண் 23, தடம் எண் 25 மற்றும் நகர புறநகர பஸ்களின் சேவையை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரகுமத்துல்லா, முக்கண்ணாமலைப்பட்டி

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், தென்னம்பாடி கிராமம் கூத்தக்குடியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு யாரேனும் இறந்தால் இந்த பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்து வருகின்றனர். ஆனால் மயானத்திற்கு செல்லும் பாததையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தமிழரசன், கூத்தக்குடி

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள அண்ணாநகர் தெற்குப்புறம் தெற்கு தொண்டைமான்ஊரணி செல்லும் சாலையின் அருகே மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து உடைந்த நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஜீவா, அண்ணாநகர்

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, நகரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நகரப்பட்டியிலிருந்து வடக்கிப்பட்டி, வடகாடு செல்லும் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும் இரவில் தெரு விளக்கு இல்லாமையால் விபத்தும் நேரிட வாய்ப்புள்ளது. எனவே இதனை தவிற்கும் பொருட்டு நகரப்பட்டியிலிருந்து வடக்கிப்பட்டி வடகாடு செல்லும் சாலையை சீரமைத்து தெரு விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாண்டியன், நகரப்பட்டி


Next Story