தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விபத்து அபாயம்
கரூர் மாவட்டம் புங்கோடை பகுதியிலிருந்து சொட்டையூர் வரை நொய்யல் -வேலாயுதம்பாளையம் நெடுஞ்சாலை நெடுகிலும் சாலை விரிவாக்கத்திற்காக தார் சாலை ஓரத்தில் குழிகள் பறிக்கப்பட்டு வருகிறது. பின்னர் குழிகளை நிரப்பி தார் சாலை அமைப்பதற்காக லாரிகளில் செயற்கை மணலுடன் கூடிய ஜல்லி கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகிறது. இதனால் தார் சாலை நெடுகிலும் செயற்கை மணல் கிடக்கிறது. அப்போது அந்த வழியாக செல்லும் லாரிகள், பஸ்கள், கார்களின் டயர்களில் பட்டு புழுதி பறக்கிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களின் கண்களில் புழுதி பட்டு விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராம்குமார், புங்கோடை
குண்டும், குழியுமான சாலை
சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தவுட்டுப்பாளையம் போலீஸ் செக்போஸ்ட் வழியாக சர்வீஸ் சாலை செல்கிறது. மேம்பாலம் அமைக்கும் பணி நீண்ட காலமாக நடைபெற்று வருவதால் அனைத்து வகையான வாகனங்களும் இந்த சர்வீஸ் சாலை வழியாகத்தான் செல்கிறது. பழைய போலீஸ் செக்போஸ்ட் வழியாக செல்லும் தார் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் நிலைதடுமாறி செல்கின்றன. இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வாகன ஓட்டிகள், தவுட்டுப்பாளையம்
சிதிலமடைந்து வரும் பாலம்
கரூர் மாவட்டத்தையும், நாமக்கல் மாவட்டத்தையும் இணைக்கும் காவிரி ஆற்றுப்பாலம் தவுட்டுப்பாளையம்- பரமத்தி வேலூர் இடையே கடந்த1957-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சரின் முயற்சியால் கட்டப்பட்டது. மதுரை, திண்டுக்கல், ராமேஸ்வரம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த பழைய பாலத்தின் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆனதன் காரணமாக அதன் அருகே புதிய பாலம் கட்டப்பட்டது. சேலம் பகுதியில் இருந்து மதுரை நோக்கி செல்லும் வாகனங்கள் புதிய பாலத்திலும், மதுரை, திண்டுக்கல் பகுதியில் இருந்து சேலம் நோக்கி செல்லும் வாகனங்கள் பழைய பாளையத்தலும் சென்று வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்து பாலத்தின் தன்மை குறைந்து சிதிலமடைந்து வருகிறது. மேலும் நெடுகிலும் ஏராளமான குழிகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இசக்கிமுத்து, தவுட்டுப்பாளையம்
சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
நொய்யல் ஆறு கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலையில் தொடங்கி திருப்பூர் மாவட்டம் வழியாக கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. காவிரி ஆற்றில் கலக்கும் இடத்திலிருந்து மெயின் காவிரி ஆறு வரை நெடுகிலும் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர் ஆங்காங்கே செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும் காவிரி ஆற்றுக்குள் முளைத்துள்ள சீமைக்கருவேல மரங்களால் கால்நடைகளுக்கும் பெரும் ஆபத்து எதிர் நோக்கி காத்திருக்கிறது. கருவேல மர காய்களை கால்நடைகள் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்பட்டு உடல் உபாதைகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீமைக்கருவேல மரங்களை அகற்றி நெடுகிலும் சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
திவ்யா, நொய்யல்
பாதியில் நிற்கும் களம் கட்டும்பணி
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முத்தனூரில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி புதிய விவசாய களம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சில காரணங்களால் திடீரென களம் கட்டும் பணி பாதியில் நின்று விட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த பணி தொடர்ந்து நடைபெறாமல் இருந்து வருகிறது. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பாதியில் நிறுத்தப்பட்டுள்ள விவசாய களம் கட்டும் பணியை தொடங்கி பணியை விரைந்து முடித்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சேகர், முத்தனூர்