தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

மணல் அள்ளப்படுவது தடுக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம். செந்துறை வட்டம் தளவாய் வடக்கு சிலூப்பணூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள வெள்ளாற்றில் சிலர் அனுமதியின்றி மணல்களை அள்ள வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், சிலூப்பணூர்

மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், அரங்கோட்டை மடத்து தெரு 8-வது வார்டு சாலையின் நடுப்பகுதியில் மின்விளக்கு உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மாற்றி வேறு இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், அரங்கோட்டை

கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சாலைகளில் மாலை நேரத்தில் படுத்து கொள்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ராஜா, மீன்சுருட்டி.

போக்குவரத்து நெரிசல்

அரியலூர் மார்க்கெட் கடைவீதி பகுதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் முன்பு ஏராளமான பொருட்களை வைத்து ஆக்கிரமித்து செய்துள்ளனர். மேலும் கடைகளின் முன்பு ஆங்காங்கே ஏராளமான சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சாலையை மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிேறாம்.

பொதுமக்கள், அரியலூர்.

நூலகம் பயன்பாட்டிற்கு வருமா?

அரியலூர் மாவட்டம், பெரிய திருகோணம் செல்லும் முதன்மை சாலையில் மு,புத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கிராமப்புற நூலகம் ஒன்று கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்சமயம் வரை இந்த நூலகம் பயன்பாட்டில் இல்லை. மேலும், நூலக கட்டிடத்தின் மேல் தளம் சிதிலமடைந்தும் முன்புற சிமெண்டு கலவைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் முன்புற பகுதியில் செடிகள் வளர்ந்துள்ளது. நூலகம் பயன்பாட்டில் இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாழடைந்த நூலக கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய நூலகம் அமைத்து தர முன்வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மு.புத்தூர்


Next Story