தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

புதிய மின்கம்பம் பயன்பாட்டிற்கு வருமா?

புதுக்கோட்டை மாவட்டம், பழைய ஆதனக்கோட்டையில் நல்லமுத்தான் ஊரணிகரையில் சோத்துப்பாளை செல்லும் சாலை அருகே இருந்த பழுதடைந்த மின்கம்பத்தின் அருகே புதிய மின்கம்பம் நடப்பட்டுள்ளது. ஆனாலும் புதிய மின்கம்பம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எனவே பழுதடைந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்றி புதிதாக நடப்பட்ட மின்கம்பத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பழைய ஆதனக்கோட்டை.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கல்லுக்காரன்பட்டி விலக்கு சாலை அருகே வளவம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சுமார் ஒரு கிலோமீட்டர் தார்சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துக்குமார், வளவம்பட்டி.

மயானத்திற்கு செல்ல பாதை வசதி வேண்டும்

விராலிமலை தாலுகா, தென்னம்பாடி ஊராட்சி கூத்தக்குடியில் மயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் ஊரில் யாரேனும் இறந்தால் அவர்களை கொண்டு செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே இந்த பாதையை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழரசன், கூத்தக்குடி.

அங்கன்வாடி கட்டிடம் சீரமைக்கப்படுமா?

விராலிமலை தாலுகா, தென்னம்பாடி ஊராட்சி கூத்தக்குடியில் அங்கன்வாடி பள்ளி உள்ளது. இந்த அங்கன்வாடி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த அங்கன்வாடி மையமானது அங்குள்ள நாடக மேடையில் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு 1ஆண்டாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கூத்தக்குடி.

தெருநாய்கள் தொல்லை

புதுக்கோட்டை நகரப்பகுதிகளில் உள்ள சாலைகளில் ஏராளமான தெருநாய்கள் இரவு நேரங்களில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துகின்றன. இதனால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் குழந்தைகளையும் கடிக்க பாய்கின்றன. இதனால் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புதுக்கோட்டை.


Next Story