தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

கால்வாயில் முளைத்துள்ள செடி-கொடிகளை அகற்ற கோரிக்கை

கரூர் மாவட்டம் கரைப்பாளையம் அருகே இளங்கோ நகர் வெள்ளதாரை பகுதி வழியாக சுற்றுவட்டார பகுதி விவசாயிகளின் நலன் கருதி உபரி நீர் கால்வாய் வெட்டப்பட்டு செல்கிறது. இந்த உபரி நீர் கால்வாயில் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் மழைநீர் செல்கிறது. இந்நிலையில் உபரி நீர் கால்வாய் தூர் வாரப் பட்டு பல ஆண்டுகள் ஆனதால் ஆங்காங்கே செடி கொடிகள் முளைத்து தண்ணீர் தேங்கி வருகிறது .அதனால் மழை நீர் மற்றும் உபரி நீர் தங்கு தடை இன்றி செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கரைப்பாளையம்.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், மூர்த்திபாளையத்தில் இருந்து டி.பி.எல். சிமெண்டு ஆலை வரை செல்லும் 3 கிலோ மீட்டர் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களில் செல்லும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

ரவிசந்திரன், மூர்த்திபாளையம்.

இடிந்து விழும் நிலையில் உள்ள நிழற்குடை

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு எதிர் பஸ் நிறுத்த நிழற்குடை உள்ளது. இப்பகுதி பொது மக்களுக்கும் பள்ளி மாணவர், மாணவிகள் அனைவரும் இங்கு தான் பஸ் ஏறுவார்கள். பஸ் வரும் வரையில் காத்துயிருப்பதற்கு இந்த நிழற்குடை ,பயன்பட்டு வந்தது. ஆனால் இந்த நிழற்குடையின் மேல் மட்டம் வெடிப்பு ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை போன்று சுற்றிலும் இதே நிலையில் உள்ளது. நிழற்குடையை தாங்கி நிற்கும் சிமெண்ட் தூண்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பள்ளிகள் முடிந்து வரும் மாணவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது மாணவர்கள் இந்த நிழற்குடைக்கு வருவதற்கு அச்சப்படுகிறார்கள் ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை அகற்றிவிட்டு, மாற்று நிழற்குடை அமைத்து தரவேண்டும் என கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

கணேஷ், வேலாயுதம்பாளையம்.

தெருவிளக்கு அமைத்து தர கோரிக்கை

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், நெய்தலூர் ஊராட்சி, பெரியப்பனையூர், அம்பேத்கர் நகரில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள தெருவிற்கு பல ஆண்டுகளாக தெருவிளக்கு வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் தெரு முழுவதும் இருட்டாக இருந்து வருகின்றது. குடி இருக்கும் வீடு அருகே வயல்வெளி என்பதால் விஷ ஜந்துகள் அடிக்கடி வந்து செல்கிறது. குழந்தைகள், முதியோர்கள் வசித்து வருவதால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரியப்பனையூர்.

வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

சுங்க கேட்டில் இருந்து திருமாநிலையூர் வழியாக கரூருக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. திருமாநிலையூரில் இருந்து கரூருக்கும், கரூரில் இருந்து செல்லாண்டிபாளையம் செல்லும் வாகனங்களும் திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியை கடந்து செல்கின்றன. இப்பகுதியில் வாகனங்கள் வேகமாக கடக்கும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க பட வேண்டும்.

பொதுமக்கள் திருமாநிலையூர்.


Next Story