தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் எரியாததால் அவதி
திருச்சி-புதுக்கோட்டை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதியாகும். இந்த தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை கருவேப்பிலான் கேட் முன்னதாக உள்ள பிரிவு ரோடு, லேனா விலக்கு பிரிவு ரோடு, திருமயம் பிரிவு ரோடு ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் சரிவர எரிவது கிடையாது. இதனால் இரவு நேரங்களில் இந்த பிரிவு ரோடுகளில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலைகள் மற்றும் ஊருக்குள் இருந்து பிரிவு ரோடு வழியாக தேசிய நெடுஞ்சாலைகள் செல்லும் வாகனங்கள் பெரும் சிரமம் அடைகிறது. வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர். இரவில் மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே தேசியநெடுஞ்சாலையில் பிரிவு ரோடுகளில் விலக்கு பகுதிகளில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகனஓட்டிகள், புதுக்கோட்டை.
அரசு அருங்காட்சியகம் புதுப்பொலிவு பெறுவது எப்போது?
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் பழைமை வாய்ந்ததாகும். இங்கு அரிய பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதோடு, காட்சியும் படுத்தப்பட்டுள்ளன. மேலும் கற்சிலைகள், மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய பொருட்கள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை உள்ளது. இந்த அரசு அருங்காட்சியகத்தை புனரமைத்து புதுப்பிக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அதன்பின் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மொத்த பொருட்களையும் பொதுமக்கள் பார்வையிட முடியாமல் தற்காலிகமாக பக்கத்து கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை மட்டும் பார்வையிட்டு வரக்கூடிய நிலை உள்ளது. இதனால் புனரமைப்பு பணி முடிந்து புதுப்பொலிவுடன் அரசு அருங்காட்சியகம் எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளோம். இதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அருங்காட்சியக புனரமைப்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.
அரசு கோழி பண்ணை மீண்டும் செயல்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு செயல்பட்டு வந்தது. தற்போது கோழிப்பண்ணை புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அங்கு சமூக விரோத செயல்கள் அதிகமாக நடந்து வருகிறது. எனவே அந்த கோழிப்பண்ணையை மீண்டும் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், திருவரங்குளம்.
குளத்தின் படிக்கட்டுகள் சீரமைக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் தெப்பக்குளமான திருக்குளம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குளித்தும், துணிகளை துவைத்து பயன்படுத்தி வருகின்றனர். கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களும் அதிக அளவில் வந்து நீராடிச் செல்கின்றன. தற்போது குளத்தின் படித்துறைகளில் பாசிபடந்து காணப்படுவதால் குளிக்க வரும் பொதுமக்கள் தவறி விழுந்து வருகின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் உள்ள பாசிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், திருவரங்குளம்.
குரங்குகள் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், நத்தம் பண்ணை பகுதிகளில் தினந்தோறும் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த குரங்குகள் வீடுகளின் உள்ளே புகுந்து வாழை, மாமரம், தென்னை மரங்களில் ஏறி இலைகளை கடித்து சேதப்படுத்துகிறது. மேலும் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள உணவுகளை எடுத்து சென்று விடுகிறது. சில நேரங்களில் முதியவர்கள், குழந்தைகளை கடிக்கிறது. இதனால் அனைத்து தரப்பினும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், நத்தம் பண்ணை