தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் 3 நுழைவுப்பகுதிகளிலும், ஊரின் பெயர் பலகை இல்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் லாடாபுரத்திற்கு வருபவர்கள் சிரமம் அடைவதாகவும் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊரின் நுழைவுப்பகுதிகளில் ஊர் பெயர் பலகை வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் செய்தி தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ராம், லாடபுரம்
நாய்கள் தொல்லை
பெரம்பலூர் ரோஸ் நகருக்குள் நுழையும்போது வலது புறம் உள்ள தெருவில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை பின்னால் துரத்தி வந்து கடிக்க பாய்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், முதியவர்களும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் சுற்றிதிரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்
ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள பஸ் நிலைத்தில் இருந்து ஆலத்தூர் கேட் செல்லும் சாலை, பெரம்பலூர் மற்றும் திருச்சி செல்லும் சாலைகளில் இருப்புறமும் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்துள்ளனர். இதனால் சாலையில் வாகனங்கள் சென்று வர முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், செட்டிக்குளம்.
குப்பைகளை முறையாக அள்ள வேண்டும்
பெரம்பலூர் நகரப்பகுதியில் ஆங்காங்கே சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் குப்பைகள் முறையாக அள்ளப்படாததால் தற்போது மலை போல் குவிய தொடங்கி உள்ளது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை முறையாக அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
ஷேர் ஆட்டோக்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்
பெரம்பலூர் நகர்ப்பகுதியில் ஷேர் ஆட்டோக்கள் அதிகமாக இயங்குகின்றன. ஆனால் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தம் இல்லாத பகுதிகளிலும் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றனர். இதனால் அதன் பின்னால் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் ஷேர் ஆட்டோக்களை கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.