தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கரூர் மாவட்டம், ஆத்தூர் பிரிவு சுந்தர்நகர் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் சாலையோரங்களில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் மூக்கை பிடித்தவாறு சென்று வருகின்றனர். மேலும் குப்பைகள் பறந்து வீட்டிற்குள்ளேயும் சென்று விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பத்குமார், சுந்தர்நகர்

சேதமடைந்த குடிநீர் தொட்டி

கரூர் மாவட்டம், மாங்காசோளிபாளையம் ரெயில்வே கேட் அருகே அப்பகுதி மக்கள் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் குடிநீர் தொட்டி தாங்கி நிற்கும் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் குடிநீர் தொட்டி கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளன. இதனால் தற்போது குடிநீர் வருவதும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தொட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணிக்கவேல், மாங்காசோளிப்பாளையம்

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் சந்தைக்கு கிழக்கே கழிவு நீர் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், உப்பிடமங்கலம்

நாய்கள் தொல்லை

கரூர் மாநகரப்பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலைகளில் வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ெபாதுமக்கள், கரூர்

பயணிகள் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை

கரூர் மாவட்டம், ஓலப்பாளையம் பிரிவு சாலை அருகே அப்பகுதியில் பஸ்களில் செல்லும் பயணிகளின் நலன் கருதி பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. இந்தநிலையில் பயணியர் நிழற்குடை அருகே பஸ்கள் நிற்காமல் சென்றதன் காரணமாக அதனை பயணிகள் பயன்படுத்தவில்லை. இதனால் பயணிகள் நிழற்குடையின் உள் பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ெபாதுமக்கள், ஓலப்பாளையம்


Next Story