'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

மதுரை

வாகனஓட்டிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் வைகை ஆற்றின் கரைப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் இரவுநேரங்களில் தெருவிளக்கு இல்லாத காரணத்தால் இந்த சாலையில் சிறு, சிறு விபத்துகளும் நடக்கிறது. வாகனஓட்டிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமர், பரமக்குடி.

பொதுமக்கள் அச்சம்

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமம் அண்ணாநகா் தெரு வழியாக கனரக வாகனங்கள் பல வேகமாக செல்கின்றன. மேலும் குடியிருப்பு பகுதிகளின் வழியாக இந்த வாகனங்கள் வேகமாக செல்வதால் மக்கள் தங்களின் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கே மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராஜலெட்சுமி, கொல்லங்குடி.

ஊருணிகள் தூர்வாரப்படுமா?

தற்ேபாது அக்னி நட்சத்திரம் முடிந்து விட்டது. எனவே பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டத்தில் உள்ள ஊருணிகளை தூர்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அப்போது தான் மழைக்காலங்களில் தண்ணீர் வீணாகாமல் சேமித்து வைக்க முடியும். ஒருசில ஊருணிகளில் கழிவுநீர், குப்பைகள் நிறைந்து உள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து ஊருணிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தூர்வாரவும், கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆரோக்கியமேரி,கல்லல்.

சுகாதார சீர்கேடு

ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் பஞ்சாயத்து தேவேந்திரன் நகர் பகுதியில் உள்ள தெருக்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீா்கேடாக உள்ளது. மேலும் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கழிவுநீரின் நடுவே நடந்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் கொசுக்கள் உருவாகி நோய்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜ், ராமநாதபுரம்.


Related Tags :
Next Story