'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வாகனஓட்டிகள் அவதி
மதுைர அவனியாபுரம்- திருப்பரங்குன்றம் செல்லும் சாலையானது குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதுடன், சேதமடைந்த சாலையில் வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி பழுதாகின்றன. எனவே வாகனஓட்டிகளின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூர்த்தி, மதுரை.
குப்பைகள் அகற்றப்படுமா?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பொன்விழா மைதானம் அருகில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் எதிரே குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளை கால்நடைகள் சாலை முழுவதும் பரப்புகிறது. தேங்கி கிடக்கும் குப்பைகளால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனால் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வருபவர்களும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்டிபன் ஜேசுதாஸ், ராஜபாளையம்.
மின்சார வசதி வேண்டும்
மதுரை மாநகராட்சி 9-வது வார்டு உத்தங்குடி பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த அங்கன்வாடி மையத்தில் மின்சார வசதி இல்லாததால் இங்கு படிக்கும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த அங்கன்வாடி மையத்தில் மின்சார வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, உத்தங்குடி.
தொற்றுநோய் பரவும் அபாயம்
மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் உள்ள கழிவுநீா் கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உருவாகி நோய்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயினை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணாயிரமூர்த்தி, மதுரை.