'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் தட்டுப்பாடு
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் வினியோகிக்கப்படும் குடிநீரும் போதுமானதாக இல்லை. இதனால் மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி வருகின்றனர். எனவே இந்த பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ரமேஷ், சாயல்குடி.
கூடுதல் பஸ் வேண்டும்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து காரைக்குடிக்கு காலை, மாலை நேரங்களில் இயக்கப்படும் பஸ் போதுமானதாக இல்லை. இதனால் இந்த வழியாக வேலைக்கு செல்வோர், பள்ளி-கல்லூரி மாணவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், மானாமதுரை.
ஒளிராத தெருவிளக்கு
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் கிராஸ்ரோடு செக்கடித்தெருவில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே ஒளிராத தெருவிளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜான்சன், மதுரை.
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் எஸ்.ராமச்சந்திரபுரத்தில் உள்ள சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. மேலும் சாலையில் நடக்க முடியாமல் பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், எஸ்.ராமச்சந்திரபுரம்.
செய்தி எதிரொலி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் பெருங்குடி ஊராட்சி பகுதிகளில் சாலையை சீரமைக்க வேண்டும் என 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பெருங்குடி.
நாய்கள் ெதால்லை
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் சாலையில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. நாய்களின் அட்டகாசத்தால் பொதுமக்கள் சாலையில் செல்லவே அச்சம் அடைகின்றனர். மேலும் இந்த தெருநாய்களால் விபத்துகளும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். பாலா, ராமநாதபுரம்.
சுகாதார சீர்கேடு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசகுழி மயானம் அருகே குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. மேலும் சிலர் குப்பைகளை எரியூட்டுவதால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதையும், எரியூட்டப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?
மாரிமுத்து, மானாமதுரை.
வாகனஓட்டிகள் அவதி
மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிறுத்தம் முன்பு சிலர் வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் நடக்க பாதையின்றி பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். எனவே பஸ் நிறுத்தம் அருகில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விக்னேஷ், மதுரை.
கருவேலமரங்கள் அகற்றப்படுமா?
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பெரியகண்மாயில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ன. இந்த கருவேல மரங்களால் கண்மாயின் நீர்வளம் குறையும் அபாயம் நிலவுவதோடு இதனை நம்பியுள்ள விவசாயம் போன்ற தொழில்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த கண்மாயிலுள்ள கருவேலமரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜா, திருச்சுழி.
சேதமடைந்த சாலை
மதுரை மாவட்டம் மகாளிபட்டி வார்டு-1 பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பலர் இந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகின்றது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேஷ், மதுரை.