தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்திற்கு இடையூறான மின்கம்பம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே போகலூர் ஊராட்சி பாண்டிகண்மாய் கிராமத்தின் மேற்கு குடியிருப்பு பகுதியில் மின்கம்பம் அமைந்துள்ளது. இது பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவே அமைந்துள்ளது. இரவுநேரத்தில் இந்த மின்கம்பத்தில் மோதி வாகனஓட்டிகள் தினமும் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக அமைந்துள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும்.
ஜெயராஜ் கணேசன், பாண்டிகண்மாய்.
மின்திருட்டு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கல்குறிச்சி ஊராட்சியில் உள்ள மின்கம்பங்களில் இருந்து மின்சார வாரியத்தின் அனுமதி இல்லாமல் சிலர் மின்சாரம் எடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் மின்சாரம் குறைந்த மின்அழுத்தத்தில் வினியோகிக்கப்படுகிறது. மின்வினியோக குறைவால் இப்பகுதி பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். மேலும் தெருவிளக்குகள் இரவு நேரங்களில் எரியாமல் இப்பகுதி இருண்டு காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலகிருஷ்ணன், காரியாபட்டி.
அடிப்படை வசதி
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பள்ளியில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் கல்வி கற்கும் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
பாலு, திருத்தங்கல்.
வாகனஓட்டிகள் சிரமம்
ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம், மின்வாரியம் அலுவலகம் அமைந்துள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில் சேதமடைந்த சாலையால் வாகனஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலையில் உள்ள பள்ளங்களில் கவிழ்ந்து வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். அதிகாரிகள் இப்பகுதி சாலையை சீரமைத்து போக்குவரத்து சீராக அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
நிழற்குடை சீரமைக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நெற்குப்பை அருகே நெல்மேனிப்பட்டி பஸ் நிறுத்தத்தின் பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பெண்கள், முதியோர்கள் நிற்க இடம் இல்லாமல் தவிக்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மழையிலும், வெயிலிலும் பஸ் வரும்வரை காத்திருப்பதால் அவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சரிசெய்ய வேண்டும்.
தனுஷ், நெற்குப்பை.
பொதுமக்கள் அச்சம்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஓன்றியம், பூமாலைபட்டி அருகே முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். குடிநீருக்காக குண்டாற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்து இங்கு அமைத்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமிக்கிறார்கள். இந்நிலையில் இந்த குடிநீர் தொட்டியானது சேதமடைந்து காணப்படுகிறது. ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுத்து சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும்.
திவ்யா, முத்துராமலிங்கபுரம்.