பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி


பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி
x

தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி

ஈரோடு

வாகன ஓட்டிகள் குழப்பம்

ஈரோடு கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், கொல்லம்பாளையம் லெனின்வீதி பிரிவு பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அங்கு கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்று எழுதப்பட்டு உள்ளது. ஆனால் கார், வேன் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டுமா? என்று குழப்பம் அடைகிறார்கள். மேலும், கார்களில் வரும் வெளியூரை சேர்ந்த வாகன ஓட்டிகள் சாஸ்திரிநகர் வழியாக சுற்றி செல்ல வேண்டி உள்ளது. எனவே இருசக்கர வாகனங்கள், கார்கள் நுழைவு பாலம் வழியாக செல்லலாம் என்ற அறிவிப்பு பலகையை லெனின் வீதி பிரிவு பகுதியில் வைக்க வேண்டும்.

முத்துமாரி, ஈரோடு.

பழுதடைந்த சாலை

ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள திரு.வி.க. ரோடு நகரின் முக்கிய சாலையாக உள்ளது. இதனால் இந்த ரோட்டின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் மற்றும் மினி பஸ்கள் சென்றுவருகின்றன. இங்குள்ள கலைஞர் சிலை அருகே ரோட்டின் நடுவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த ரோட்டின் பல இடங்களில் ரோடுகள் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே இந்த ரோட்டில் உள்ள பள்ளத்தை மூடி முறையாக சாலை அமைப்பதுடன், ரோட்டில் ஏற்பட்ட பழுதான இடங்களையும் சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், முனிசிபல் காலனி.

போக்குவரத்துக்கு இடையூறு

அம்மாபேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட சக்தி நகரில் ஊராட்சி ரோட்டை மறைத்து சிலர் கட்டுமான பொருட்களான மணல், செங்கல் போன்றவற்றை குவித்து வைத்து உள்ளனர். இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது. எனவே ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டு உள்ள கட்டுமான பொருட்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சக்தி நகர்.

ஆபத்தான மின்கம்பம்

சென்னிமலையில் உள்ள தொலைபேசி அலுவலகம் வீதியில் ஒரு மின்சார கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த மின் கம்பம் சாய்ந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள அந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ருத்ரமூர்த்தி, சென்னிமலை.

பாராட்டு

அந்தியூர்-ஆப்பக்கூடல் ஓடை பள்ளத்தில் இருந்து சிந்த கவுண்டன்பாளையம் செல்லும் தார் சாலை மிகவும் மோசமாக காணப்பட்டது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது அந்த ரோடு சீரமைக்கப்பட்டுள்ளது. எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சிந்தகவுண்டன்பாளையம்


Next Story