பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி
பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் பகுதி
குவிந்து கிடக்கும் குப்பை
அந்தியூர் செம்புளிச்சாம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் நூலகம் உள்ளது. இந்த நூலகத்தின் அருகே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மேலும் காற்று பலமாக வீசும்போது குப்பை தூசுகள் பறந்து நூலகத்தில் விழுகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி அந்த பகுதியை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமசாமி, செம்புளிச்சாம்பாளையம்.
சுகாதார சீர்கேடு
ஈரோடு சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவில் பின்புறம் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாக்கடை கழிவுநீர் வெளியேறி அங்குள்ள சாக்கடை வடிகாலில் ஓடுகிறது. அடைப்பு காரணமாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் அதிக அளவில் வீசுவதுடன் சுகாதார சீ்ர்கேடும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நடமாட முடியவில்லை. மேலும் அந்த பகுதியில் கொசு உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே பாதாள சாக்கடை அடைப்பை நீக்கி கழிவுநீர் தேங்கி நிற்காமல் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
புதர்களை அகற்றவேண்டும்
கோபி திருமலை நகர் 3-வது வீதியில் கோபி நகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் செடி, கொடிகள் அதிகமாக வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இங்கிருந்து பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு வர வாய்ப்பு உள்ளது. இதனால் அச்சத்தில் உள்ளோம். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி
ஆபத்தான மின்கம்பம்
கோபி பஸ் நிலையம் அருகில் எஸ்.டி.எம். காலனியில் மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், எஸ்.டி.எம். காலனி.
பாராட்டு
பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் ஊராட்சி ஆயிக்கவுண்டன்பாளையத்தில் பஸ் நிறுத்த நிழற்குடை பழுதடைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது நிழற்குடை சீரமைக்கப்பட்டது. பொதுமக்கள் நலன் கருதி செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டு்க்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
பி.பழனிச்சாமி, ஆயிக்கவுண்டன்பாளையம்.
கோரிக்கை ஏற்பு
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு சுகாதாரமின்றி காணப்பட்டது. எனவே தூய்மை பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து கோரிக்கை ஏற்கப்பட்டு தூய்மை பணியை மேற்கொள்ள தூய்மை பணியாளர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதேபோல் திரு.வி.க. திடலில் உள்ள கிணற்றை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டு்க்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆர்.மூர்த்தி, புஞ்சைபுளியம்பட்டி