'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பூங்கா முன்பு குப்பைகள்
கம்பத்தில் காந்திஜி பூங்கா முன்பு குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே பூங்கா முன்பு கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு, இனிமேல் குப்பைகளை கொட்டாத வகையில் தடுக்க வேண்டும்.
பிரபு, கம்பம்.
மின்வெட்டு
உத்தமபாளையம் நகரில் முன்அறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் முதியவர்கள், நோயாளிகள் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. மேலும் குறைந்த அழுத்தத்துடன் மின்சாரம் சப்ளை ஆகிறது. எனவே மின்வெட்டை சரிசெய்து, சீராக மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும்.
பக்ருதீன், உத்தமபாளையம்.
சேதமடைந்த பாலம்
தாடிக்கொம்பு பூஞ்சோலை பகுதியில் இருந்து அய்யம்பாளையம் செல்லும் சாலையில், சிக்கையகவுண்டனூர் அருகே பாலம் சேதம் அடைந்து விட்டது. இதனால் மழைக்காலத்தில் அந்த வழியாக மக்கள் செல்ல முடியவில்லை. இங்கு புதிதாக பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெரால்டு, வக்கம்பட்டி.
குறியீடு இல்லாத வேகத்தடைகள்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம், அஞ்சலி ரவுண்டானா பகுதியில் வேகத்தடைகள் அமைந்துள்ளன. இந்த வேகத்தடைகளில் வெள்ளை நிறத்தில் குறியீடுகள் இல்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தை சந்திக்க நேரிடுகிறது. எனவே வேகத்தடைகளில் குறியீடு வரைய வேண்டும்.
சுதாகர், செட்டிநாயக்கன்பட்டி.
பஸ் வசதி தேவை
வடமதுரையை அடுத்த வேல்வார்கோட்டைக்கு உரிய நேரத்தில் பஸ்கள் வருவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே பஸ்கள் உரிய நேரத்தில் வந்து செல்வதற்கும், கூடுதல் பஸ்களை இயக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வேல்வார்கோட்டை.
நோய் பரவும் அபாயம்
தேனி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்குக்கு வெளியே கைகழுவும் இடம் உள்ளது. அது முறையாக பராமரிப்பு இல்லாததால், தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை முறையாக பராமரித்து தூய்மையாக வைக்க வேண்டும்.
கணேசன், தேனி.
அரசு ஆஸ்பத்திரியில் தெருநாய்கள்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் தெருநாய்கள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிகின்றன. இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் தனியாக செல்வதற்கு நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் தெருநாய்கள் வராமல் தடுக்க வேண்டும்.
கதிர், தேனி.
குப்பை குவியல்
திண்டுக்கல்-திருச்சி சாலையில், சீலப்பாடியில் கே.ஆர்.நகர் அருகே சாலை ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்றுவதோடு, இனிமேல் யாரும் குப்பைகளை கொட்டாத வகையில் தடுக்க வேண்டும்.
மாரி, திண்டுக்கல்.
வேகத்தடை அவசியம்
செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பு உள்ள சாலையில் வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்கின்றன. இதனால் மாணவர்கள், முதியவர்கள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும்.
ராஜ், செம்பட்டி.
சாலையில் பள்ளங்கள்
திண்டுக்கல் ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் முன்புள்ள சாலையில் பள்ளங்கள் காணப்படுகின்றன. இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சாலையில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.
ராமசாமி, திண்டுக்கல்.
-------------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.