'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Aug 2023 1:15 AM IST (Updated: 3 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

மின்கம்பம் மாற்றப்படுமா?

நிலக்கோட்டை அருகே எத்திலோடு ஊராட்சி பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் சாலை ஓரத்தில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்துவிட்டது. மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சு உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் பலத்த காற்று வீசும்போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். எனவே சேதம் அடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் வைக்கவேண்டும். -பொதுமக்கள், பாஞ்சாலங்குறிச்சி.

எடையில் முறைகேடு

உத்தமபாளையத்தில் ஒரு சில காய்கறி கடைகளில் எடை அளவு குறைவாக இருக்கிறது. இதனால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடைகளில் உள்ள தராசுகளை சோதனை செய்ய வேண்டும். -பக்ருதீன், உத்தமபாளையம்.

சாலையில் திரியும் மாடுகள்

பழனி பஸ் நிலையம் அருகே வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விபத்தை சந்திப்பதோடு, மாடுகளும் காயம் அடைகின்றன. சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க வேண்டும். -பொதுமக்கள், பழனி.

குண்டும், குழியுமான சாலை

பழனி பெரியாவுடையார் கோவிலுக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் பக்தர்கள் மட்டுமின்றி அந்த வழியாக மானூருக்கு செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சாலை முழுவதும் மண் பரவி கிடப்பதால் காற்று வீசும்போது இருசக்கர வாகனங்களில் செல்ல முடியவில்லை. எனவே சாலையை சீரமைக்க வேண்டும். -அறிவாசான், மானூர்.

சாலை சீரமைக்கப்படுமா?

சின்னமனூர் நகராட்சியின் 14-வது வார்டு கச்சேரிகாமு தெருவில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதனால் தெருவில் பதிக்கப்பட்டு இருந்த பேவர்பிளாக் கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. எனவே தெருவில் உள்ள பேவர்பிளாக் சாலையை சீரமைக்க வேண்டும். -சிவாஜி, சின்னமனூர்.

சாக்கடை கால்வாயில் குப்பைகள்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் அடியனூத்து ஊராட்சி 11-வது வார்டு மருத்துவர் காலனியில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி குப்பைகளை அகற்ற வேண்டும். -பொதுமக்கள், அடியனூத்து.

சேதமான சாலை

வேடசந்தூர் தாலுகா சித்தூர் கிராமம் நல்லமநாயக்கன்பட்டியில் இருந்து மெயின்ரோட்டுக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து விட்டது. இருசக்கர வாகனங்களில்கூட செல்ல முடியாத அளவுக்கு சாலை மோசமாக உள்ளது. இதனால் தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும். -பொதுமக்கள், நல்லமநாயக்கன்பட்டி.

பயணிகள் நிழற்குடை நாசம்

தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளே புகையிலையை பயன்படுத்தி விட்டு ஒட்டி வைத்துள்ளனர். இதனால் பயணிகள் நிழற்குடையை பார்க்கவே அறுவறுப்பாக இருக்கிறது. இந்த பயணிகள் நிழற்குடையை சுத்தம் செய்வதோடு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், தேனி.

பொதுமக்கள் அவதி

வடமதுரை ஊராட்சி ஒன்றியம் பாடியூர் ஊராட்சி பாறைப்பட்டி மயானம் வழியாக வேலாம்பட்டி வரை செல்லும் சாலை சேதம் அடைந்துவிட்டது. இதனால் கிராம மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும். -முருகன்சேகர், பாடியூர்.

அச்சுறுத்தும் ஆட்டோக்கள்

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ்நிலையம் செல்லும் ஆட்டோக்கள் இந்திராநகர், போடிநாயக்கன்பட்டி, மென்டோன்சா காலனி, ஆரோக்கியமாதா தெரு ஆகிய பகுதிகள் வழியாக செல்கின்றன. இந்த ஆட்டோக்கள் மின்னல் வேகத்தில் செல்வதால் மாணவ-மாணவிகள், முதியவர்கள் அச்சத்துடன் சாலையில் செல்லும் நிலை உள்ளது. எனவே ஆட்டோக்கள் தெருக்களில் செல்வதை தவிர்த்து மெங்கில்ஸ் சாலை வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -மகேஸ்வரி, திண்டுக்கல்.

----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Related Tags :
Next Story