தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9176108888 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கோவில் சுவரில் வளர்ந்த செடிகள்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள ஊர்க்கோவில் மற்றும் உற்சவர் கோவில் என்று அழைக்கப்படும் பக்தோசித பெருமாள் கோவில் அலுவலக கட்டிடத்தின் பின்பக்க சுவரில் செடிகள் வளர்ந்து புதர்போல் காணப்படுகிறது. செடிகள் வளர வளர கட்டிடத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கோவில் நிர்வாகம் உடனடியாக செடிகளை அகற்றி கோவில் சுவரை பாதுகாக்க வேண்டும்.
-சுரேஷ்குமார், சோளிங்கர்.
குளத்தை சீரமைக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா காந்திநகர் பகுதியில் நல்ல தண்ணீர் குளம் உள்ளது. அந்தக் காலத்தில் இருந்தே அக்குளத்தில் உள்ள நீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் பொதுமக்கள் பலர் குளத்தை ஆக்கிரமிக்க தொடங்கினர். அதில் கழிவுநீர், ரசாயனம் போன்றவை நீரில் கலந்ததால், நல்ல தண்ணீர் குளம் பாழடைந்து துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. ஆனால் வாலாஜா நகராட்சி சார்பில் இதுவரை இந்தக் குளத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நல்ல தண்ணீர் குளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சீரமைக்க வேண்டும்.
-அழகர்சாமி, வாலாஜா.
குடிநீர் வினியோகம் செய்வார்களா?
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சொரங்கன் வட்டம் பகுதியில் உள்ள ஒரு ஆழ்துளை கிணறு 5 மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆழ்துளைக்கிணற்றை சரிசெய்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வார்களா?
-சின்னசாமி. சொரங்கன்வட்டம்.
மணல் கொள்ளை
காட்பாடி காங்கேயநல்லூர் பாலாற்றில் தினமும் பட்டப்பகலிலேயே மணல் ெகாள்ளை நடந்து வருகிறது. மணலை கோணிப்பைகளில் அள்ளி இரு சக்கர வாகனங்களில் கடத்தி செல்கிறார்கள். மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, மணல் ெகாள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரவிந்தன், காங்கேயநல்லூர்.
வீணாக வெளியேறும் குடிநீர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- ஆலங்காயம் செல்லும் சாலையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பல இடங்களில் உடைந்து குடிநீர் வீணாக வெளிேயறுகிறது. கொத்தகோட்டை பகுதியில் கழிவுநீர், மழைநீர், காவிரி கூட்டுக் குடிநீர் ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் கலந்து சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-லோகேஷ், வாணியம்பாடி.
ஒளி பிரதிபலிப்பான் பொருத்தப்படுமா?
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் முதல் மேல்செங்கம், தண்டராம்பட்டு வரை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஒருசில இடத்தில் தேசிய நெடுஞ்சாலை காப்புக்காட்டை ஒட்டி உள்ளது. சாலையோரம் ஒளி பிரதிபலிப்பான் பொருத்த வேண்டும். அத்துடன் சந்திப்பு சாலைகள் குறித்த எச்சரிக்கை பலகையும் வைக்க வேண்டும்.
-சிவச்சந்திரன், செங்கம்.
மரத்தடியில் அமர்ந்து வேலை பார்க்கும் போலீசார்
ஆரணி, களம்பூர், போளூர், சந்தவாசல், கண்ணமங்கலம், திமிரி, வாழைப்பந்தல், பெரணமல்லூர், சேத்துப்பட்டு, கலவை உள்பட பல்வேறு பகுதிகளில் நடக்கும் சாலை விபத்துகள், பாம்பு கடி, சொத்துத் தகராறு, அடிதடி வழக்குகள், வழிப்பறி போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர். காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். மேற்கண்ட ஊர்களில் இருந்து புகார், வழக்கு தொடர்பாக வரும் போலீசாருக்கு ஆரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. ஆனால் அங்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. போலீசார் மரத்தடியில் அமர்ந்து பணி செய்யக்கூடிய நிலை உள்ளது. கழிப்பறை வசதியுடன் கூடிய கட்டிடம் அமைத்துத் தர காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?
-ராகவன், ஆரணி.