'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
பள்ளத்தால் விபத்து அபாயம்
பழனி இந்திராநகரில் புதுதாராபுரம் சாலையில் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஏழுமலை, பழனி.
தூர்வாரப்படாத கால்வாய்
உத்தமபாளையம் 11-வது வார்டு மாதர் சங்க தெருவில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-விஜயகுமார், உத்தமபாளையம்.
குளத்தை சூழ்ந்த அமலை செடிகள்
திண்டுக்கல் பள்ளப்பட்டி குளம் என்றழைக்கப்படும் நாகசமுத்திர குளம் பராமரிப்பு இல்லாததால் அமலைச்செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. குளமும் பயன்பாடின்றி உள்ளது. எனவே குளத்தை தூர்வாரி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதுரைவீரன், பள்ளப்பட்டி.
பயணிகள் நிழற்குடை வேண்டும்
சித்தையன்கோட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகமது, சித்தையன்கோட்டை.