'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்
மரங்களால் விபத்து அபாயம்
நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகே அரசு கல்வி வட்டார வளமையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2 வேப்ப மரங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. கடந்த சில நாட்களாக நிலக்கோட்டை பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மரங்கள் சாய்ந்து அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மீது சாய்ந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே மரங்களை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அன்பு, நிலக்கோட்டை.
குண்டும், குழியுமான சாலை
பழனி இட்டேரி சாலையில் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அறிவாசன், மானூர்.
இருக்கை வசதி வேண்டும்
பழனி பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு இருக்கை வசதி செய்யப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் இருக்கை வசதியை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்தன், பழனி.
சேதமடைந்த மின்கம்பங்கள்
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் எதிர்புறம் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மின்கம்பங்களின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிவதால் எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த், திண்டுக்கல்.