'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள்தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

தென்காசி:

பராமரிப்பு இல்லாத கிணறு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் நெல்லை-சாத்தான்குளம் மெயின் ரோடு அருகில் பழைய கிணறு பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் மக்கள், குழந்தைகள், கால்நடைகள் தவறி கிணற்றில் விழும் அபாயம் உள்ளது. ஆதலால் ஆபத்தான அந்த கிணற்றை முழுவதுமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

செல்லப்பாண்டியன், முனைஞ்சிப்பட்டி.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கடைசியில் ஆவுடையாபுரம் கிராமம் அமைந்து உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பகல், இரவு நேரங்களில் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டுமானால் திருவேங்கடம், ஆலங்குளத்திற்கு தான் செல்ல வேண்டும். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள். ஆகவே, ஆவுடையாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதனால் விருதுநகர் மாவட்ட மக்களும் பயன்பெறுவார்கள். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஆனந்தராஜ், குளக்கட்டாக்குறிச்சி.

தெருவின் நடுவில் மின்கம்பம்

தென்காசி மாவட்டம் குணராமநல்லூர் ஊராட்சி குபேரபட்டணம் காந்தி காலணி 1-வது வார்டு தெருவின் நடுப்பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே, அந்த மின்கம்பத்தை தெருவின் ஓரத்தில் மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

ஞானசேவியர், ஆலங்குளம்.

எரியாத மின்விளக்குகள்

செங்கோட்டை நகரின் ஒடுக்கம் ஆறுமுகசுவாமி சித்தர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பங்கள் சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும், அதில் உள்ள மின்விளக்குகளும் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பங்களை சரிசெய்து, மின்விளக்குகளை எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மகேந்திரமாரியப்பன், செங்கோட்டை.

குரங்கு தொல்லை

திருவேங்கடம் தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக குரங்கு தொல்லை அதிகமாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்பவர்களை விரட்டுகிறது. வீடுகளில் புகுந்தும் அட்டகாசம் செய்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

அனுசுயா, திருவேங்கடம்.

வேகத்தடை வேண்டும்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி வடக்கு ரதவீதியில் நெல்லை-திருச்செந்தூர் பிரதான சாலையில் ஏற்கனவே வேகத்தடை இருந்தது. அந்த பகுதியில் பேவர் பிளாக் கற்கள் பதிப்பதற்காக வேகத்தடை அகற்றப்பட்டது. தற்போது அந்த பகுதியில் வாகனங்கள் வேகமாக சென்று வருகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க கேட்டுக்கொள்கிறேன்.

ரமேஷ், ஆழ்வார்திருநகரி.

வழிகாட்டி பலகை சீரமைக்கப்படுமா?

உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லை முடிவு வழிகாட்டி பலகை பல மாதங்களாக கீழே சரிந்து கிடக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, அந்த வழிகாட்டி பலகையை புதுப்பித்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கண்மணி, உடன்குடி.

குண்டும், குழியுமான சாலை

ஆழ்வார்திருநகரி அருகே உள்ள புறையூர், பெரியபாலம், ஓடைக்கரை, அங்கமங்கலம் தார் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.

முருகேசன், ஓடைக்கரை.


Next Story