'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 Jun 2022 9:41 PM IST (Updated: 10 Jun 2022 9:42 PM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்

தெருவில் ஓடும் கழிவுநீர்

திண்டுக்கல் அனுமந்தநகர் பூக்கார கேணி தெருவில் சாக்கடை கால்வாய் சேதம் அடைந்து நடுத்தெருவில் கழிவுநீர் செல்கிறது. மேலும் தெருவில் சாலை அமைக்கப்படாததால் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் மக்கள் தெருவில் நடமாட முடியவில்லை. எனவே சாக்கடை கால்வாயை சீரமைத்து, சாலை அமைத்து தரவேண்டும்.

-மாரியப்பன், திண்டுக்கல்.

சாலையோரத்தில் குப்பைக்கு தீவைப்பு

வடமதுரை-திண்டுக்கல் சாலையில் இருந்து முத்துநகர் முதல்தெருவுக்கு திரும்பும் இடத்தில் சாலையோரத்தில் குப்பைகள் தீவைத்து எரிக்கப்படுகின்றன. அதில் இருந்து வெளியேறும் புகையால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சுவாச பிரச்சினையை சந்திக்கின்றனர். எனவே சாலையோரத்தில் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

-இந்திராணி கோபிநாதன், வடமதுரை.

வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

தேனி கொட்டக்குடி பாலம் பகுதியில் வாகனங்கள் கண்டபடி நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முக்கிய சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், தேனி.

பன்றிகள் தொல்லை

திண்டுக்கல் மாலப்பட்டியில் பன்றிகள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குப்பை, கழிவுநீர் கால்வாயில் புரளும் பன்றிகள் அப்படியே குடியிருப்பு பகுதிகளில் நடமாடுகின்றன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பன்றி தொல்லையை தடுக்க வேண்டும்.

-ராஜ்குமார், மாலப்பட்டி.

வேகத்தடை அமைக்கப்படுமா?

திண்டுக்கல் ஆர்.எஸ்.சாலை, சோலைஹால் சாலை, சாலைரோடு ஆகிய சாலைகள் சந்திக்கும் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. ஆனால் அங்கு வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் வாகனங்கள் போட்டி போட்டு கொண்டு முந்தி செல்ல முயற்சி செய்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிலநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. இதை தவிர்க்க அங்கு வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

-ராணி, திண்டுக்கல்


Next Story