'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத உயர்கோபுர மின்விளக்கு
பழனி திருநகர் மெயின் ரோட்டில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்தது. தற்போது வரை பழுது சரிசெய்யப்படாததால் உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவில் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே மின்விளக்கு பழுதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, பழனி.
பயன்படுத்த முடியாத பஸ் நிலைய பாதை
தேனி புதிய பஸ் நிலையத்துக்குள் பொதுமக்கள் நடந்து செல்வதற்கான பாதையில் 3, 4 சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பஸ் நிலையத்துக்குள் செல்லும் பாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வேந்திரன், தேனி.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
உத்தமபாளையம் தாலுகா கோம்பை பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. குறிப்பாக சாக்கடை கால்வாய் அமைந்துள்ள இடங்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அபினேஷ்வரன், கோம்பை.
தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்
ஆத்தூர் தாலுகா வீரக்கல்லை அடுத்த வீ.கூத்தம்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக பொருத்தப்பட்ட குழாய் சேதமடைந்துவிட்டது. இதனால் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். எனவே சேதமடைந்த குழாயை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமு, வீ.கூத்தம்பட்டி.