தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகாா் பெட்டிக்கு 9171608888 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருப்பத்தூர்

சாக்கடையாக மாறிய தெரு



வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட கொசப்பேட்டை வார்டு எண் 32 பகுதியைச் சேர்ந்த கஸ்த மேட்டுத்தெருவில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தெருவில் வழிந்தோடி தெருவே சாக்கடையாக மாறிவிட்டது. இதனால் அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெருவில் நடக்க முடியாமல் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் நோய்த் தொற்று பரவும் சூழல் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெருவில் தேங்கிய கழிவுநீரை அகற்றி மீண்டும் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பெருமாள், கொசப்பேட்டை.

குண்டும் குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி இசாக்பேட்டை 1-வது தெருவில் உள்ள சாலை குண்டும் குழியுமாக மாறி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மருத்துவ மனைக்கு செல்பவர்கள் இந்த சாலையையே பயன்படுத்துகிறார்கள். இதனால் இரவு நேரத்தில் வாகனத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-மன்சூர்பாஷா, மேல்விஷாரம்.

எரியாத உயர்கோபுர மின்விளக்கு



திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட தூயநெஞ்சக்கல்லூரி அருகில் உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த உயர்கோபுர மின்விளக்கு கடந்தசில நாட்களாக எரிவதில்லை. இதன் அருகில் காய்கறி மார்க்கெட் உள்ளதால் அதிகாலை 3 மணி முதலே திருப்பத்தூரை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் இருப்பதால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். விவசாயிகளின் நலன்கருதி உயர்கோபுர மின்விளக்கை எரியவைக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும்.

-அ.சு.பழனி, சிவராஜ்பேட்டை.

ரேஷன்கடை கட்டப்படுமா?

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் அம்மாபாளையம் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிக கட்டிடத்தில் ரேஷன் கடை தொடங்கப்பட்டது. தற்போது 1,058 குடும்ப அட்டைகள் இந்த கடையில் உள்ளது. இந்த கட்டிடத்தில் ரேஷன்பொருட்களை வைப்பதற்கு போதுமான இடவசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் அத்தியாவசிய பொருட்கள் நனைந்து வீணாகும் நிலை உள்ளது. எனவே பொருட்கள் வீணாவதை தடுக்க ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கே.ராஜேந்திரன், அம்மாபாளையம்.

சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்



ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி 30-வது வார்டு அங்காளம்மன் கோவில் பின்புறம் உள்ள கிளைவ் பஜாரில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சரியான சாலை வசதி செய்யப்படாததால் தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இங்கு பன்றிகளும் அதிகமாக உள்ளது. இதனால் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி கழிவுநீர் கால்வாய், சாலை வசதி செய்துதர வேண்டும்.

-தினேஷ் கார்த்திக், ஆற்காடு.

மின்கம்பிகள் மாற்றப்படுமா?

வேலூர் சாய்நாதபுரம் அருகே உள்ள முருகன் நனரில் மின் கம்பிகள் அனைத்தும் பழைய கம்பிகளாக உள்ளது. இதனால் திடீரென அறுந்து விழுகிறது. பல இடங்களில் கம்பிகள் விழும் நிலையில் உள்ளது. அந்த கம்பிகளுக்கு பதிலாக புதிய கம்பிகளை மாற்ற வேண்டும். மேலும் முருகன்நகர், சாஸ்திரிநகர், கன்னிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் விளக்குகள் எரிவதில்லை. எனவே அங்கு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.

- பி.எ.பழனி, முருகன்நகர்.

தெருவில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்




வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம் சுண்ணாம்பு தெரு, பி.எஸ்.எஸ்.கோவில் தெரு, மெயின்பஜார் சந்திப்பில் லேசான மழை பெய்தால் கூட கழிவுநீர் வெளியேறி அங்கு தேங்கி கிடக்கும் குப்பைகளுடன் தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இந்தப்பகுதியில் பொதுமக்கள் மழைநேரத்தில் தெருவில் நடந்துகூட செல்லமுடிவதில்லை. இரவு நேரத்தில் மிகுந்த சிரமத்திற்குள்ளாக வேண்டிய நிலை உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்களின் சிரமத்தை போக்க கழிவுநீர் கால்வாயை தூர்வாரவேண்டும்.

-சுபாஷ், வேலூர்.


Next Story