தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு வாசகர்கள் அனுப்பிய புகார்கள் .

கன்னியாகுமரி

கழிவுநீர் ஓடை தூர்வாரப்பட்டது

பறக்கைரோடு சந்திப்பில் இருந்து மணக்குடி செல்லும் சாலையில் இசங்கன்விளை உள்ளது. இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடையில் குப்பைகள் தேங்கி சாக்கடைநீர் வடிந்தோட முடியாமல் காணப்பட்டது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் ஓடையை தூர்வாரி அதில் தேங்கி நின்ற குப்பைகளை அப்புறப்படுத்தினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

குளத்தை தூர்வார வேண்டும்

வில்லுக்குறி அருகே பொட்டரற்று குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீரை பயன்படுத்தி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடக்கிறது. தற்பொழுது இந்த குளத்தில் செடிகள், புற்கள் வளர்ந்து புல்தரை போல் காட்சி அளிக்கிறது. மேலும், குளத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், இந்த குளத்தை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, குளத்தை தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜசேகர், வில்லுக்குறி.

சாலையை சீரமைக்க வேண்டும்

ஆத்திவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இரணியல் ரெயில்வே நிலையம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனங்களில் செல்கிறவர்களும், நடந்து செல்கிறவர்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் சாலையில் உள்ள பள்ளங்களில் சிக்கி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, சாலையை சீரமைத்து, மழைநீர் தேங்காதவாறு வடிகால் ஓடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மதிஷ் நாகமணி, ஆழ்வார்கோவில்.

தெருவிளக்கு எரியவில்லை

புலியூர்குறிச்சி அருகே உள்ள ஓணப்பாறை பகுதியில் மின்கம்பத்தில் உள்ள விளக்கு பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அந்த பகுதி மிகவும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் வேலை முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்களும், டியூசனுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே, பழுதடைந்த தெருவிளக்கை அகற்றிவிட்டு புதிய தெருவிளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-எம்.எஸ். மகேந்திரன், ஓணப்பாறை.

சாலையில் தேங்கும் மழைநீர்

வாவறை ஊராட்சிக்கு உட்பட்ட விரிவிளையில் இருந்து பள்ளிக்கல் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். ேமலும், சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சீரமைத்து, மழைநீர் தேங்காதவாறு வடிகால் ஓடை அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காட்லின் ஜான்ஸ், பள்ளிக்கல்.

பாதசாரிகள் அவதி

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி அருகே சாலையோரம் முட்செடிகள் வளர்ந்து சாலையில் சாய்ந்த வண்ணம் உள்ளது. இதனால், சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் இருச்சக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் மீதும் முட்செடிகள் உரசி காயப்படும் நிலை ஏற்படுகிறது. எனவே, சாலையை ஆக்கிரமித்து வளரும் முட்செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆசீர்வாதம், ஆசாரிபள்ளம்.


Next Story