'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்

சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

பெரியகுளம் அருகே எண்டபுளி ஊராட்சி இ.புதுக்கோட்டையில் ஆண்கள் சுகாதார வளாகம் புதிதாக கட்டப்பட்டு பூட்டியே கிடக்கிறது. இதனால் சுகாதார வளாகம் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். -சூரியபிரகாஷ், இ.புதுக்கோட்டை.

ரெயில் நிலையத்தில் பேட்டரி கார்

திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு பேட்டரி கார் வசதி இல்லாததால், நோயாளிகள் மற்றும் முதியவர்கள் நடைமேடைக்கு நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே பேட்டரி கார் வசதி செய்து தரவேண்டும். -ராஜேஷ்கண்ணன், திண்டுக்கல்.

மயான கட்டிடம் சேதம்

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி பொம்மணம்பட்டி மயானத்தில் காத்திருப்போர் அமரும் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் படிக்கட்டுகள், தரைத்தளம் ஆகியவை சேதம் அடைந்து விட்டன. இதனை சீரமைத்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா. -ரதீஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.

சேதம் அடைந்த சாலை

குஜிலியம்பாறை ஒன்றியம் கருங்கல் ஊராட்சி ஆனைப்பட்டியில் இருந்து அரசு உயர்நிலைப்பள்ளி வழியாக களத்தூருக்கு செல்லும் சாலை சேதம் அடைந்துவிட்டது. மேலும் சாலை முழுவதும் கற்கள் பரவி கிடப்பதோடு, பள்ளம் மேடாக காட்சி அளிக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும். -ஆறுமுகம், ஆனைப்பட்டி.

சாக்கடை பாலம் சேதம்

திண்டுக்கல் ஆர்.எம்.காலனி வி.ஐ.பி.நகரில் சாக்கடை கால்வாய் மேல் உள்ள தரைப்பாலம் சேதம் அடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை. இரவில் நடந்து செல்வோர் தரைப்பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே புதிதாக தரைப்பாலம் கட்டுவதற்கு நடவடிகை்க எடுக்க வேண்டும். -கணேசன், ஆர்.எம்.காலனி.

புதர்மண்டிய ஓடை தூர்வாரப்படுமா?

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கிராமம் சிறப்பாறை ஓடையில் நாணல் செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. கனமழை பெய்தால் ஓடையில் தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்புக்குள் புகுந்து விடும் வாய்ப்பு உள்ளது. இந்த ஓடையை தூர்வாரி புதர்களை அகற்ற வேண்டும். -பொதுமக்கள், மயிலாடும்பாறை.

தார்சாலை பணி

கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியில் இருந்து அரசு மருத்துவமனை வரை தார்சாலை அமைக்க கடந்த மாதம் பணிகள் தொடங்கின. ஆனால் சாலை அமைக்கும் பணி பாதியில் நின்று விட்டது. இதனால் அரசு மருத்துவமனைக்கு வாகனங்களில் செல்ல முடியாமல் நோயாளிகள் தவிக்கின்றனர். இந்த சாலை பணியை உடனடியாக தொடங்க வேண்டும். -குமார், கடமலைக்குண்டு.

விபத்து அபாயம்

கடமலைகுண்டுவில் இருந்து குமணன்தொழு செல்லும் சாலையில் வருசநாடு வனச்சரக அலுவலகம் அருகே சாலையோரத்தில் பள்ளம் உருவாகி உள்ளது. ஆனால் அந்த இடத்தில் எச்சரிக்கை பலகை, தடுப்புச்சுவர் எதுவும் இல்லை. இதனால் விபத்து நடைபெறும் அபாயம் உள்ளது. அதை தவிர்க்க தடுப்புச்சுவர், எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். -செல்வம், குமணன்தொழு.

------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story