'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
எரியாத தெருவிளக்கு
தேனி மாவட்டம் ஆதிபட்டியில் பூதிபுரம் மெயின்ரோட்டில் விநாயகர் கோவில் அருகே உள்ள தெருவிளக்கு எரியவில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுவதால், மக்கள் நடமாடவே பயப்படுகின்றனர். எனவே தெருவிளக்கை சரிசெய்து எரிய வைக்க வேண்டும். -ஜெய்வெங்கடேஷ், ஆதிபட்டி.
சாலை பணி எப்போது?
தேனி மாவட்டம் வருசநாடு அருகே முருக்கோடையில் இருந்து வாழவந்தான்புரம் வரை தார்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. சாலையில் ஜல்லி கற்கள் பரப்பிய நிலையில் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டன. தற்போது சாலை முழுவதும் கற்கள் பரவி கிடப்பதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும். -ராஜேஷ், வருசநாடு.
தெருவில் ஓடும் கழிவுநீர்
கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரே உள்ள தெருவில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருவில் செல்வதால், துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தருவதோடு, சாலையும் அமைத்து தரவேண்டும். -அனிதா, கருநாக்கமுத்தன்பட்டி.
சாலை சீரமைக்க அவசியம்
திண்டுக்கல் அருகே அகரத்தில் இருந்து கோட்டூர் ஆவாரம்பட்டிக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் கிராம மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜெரால்டு, வக்கம்பட்டி.
சாலையில் திரியும் மாடுகள்
பழனி பஸ் நிலையம், சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. சாலையின் நடுவே மாடுகள் படுத்து கொள்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் சாலையின் குறுக்காக செல்லும் மாடுகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். மாடுகளும் காயம் அடைகின்றன. எனவே மாடுகள் சாலையில் விடப்படுவதை தடுக்க வேண்டும். -அறிவாசான், மானூர்.
சாக்கடை கால்வாய் வசதி
அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 7-வது வார்டு சுதந்திரபுரம் முதல்தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும். -பொதுமக்கள், சுதந்திரபுரம்.
தெருவிளக்குகள் எரியுமா?
பெரியகுளத்தில் இருந்து சோத்துப்பாறை அணைக்கு செல்லும் சாலையில் புதிய மைதானம் உள்ளது. இந்த சாலையில் 15 தெருவிளக்குகள் இருந்தும் முறையாக அவை எரிவதில்லை. இரவில் அந்த வழியாக செல்வோர் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. அதேபோல் அதிகாலையில் நடைபயிற்சி செல்வோரும் சிரமப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஷ்ணுவர்தன், பெரியகுளம்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
உத்தமபாளையம் தாலுகா கோம்பை பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். -அபினேஷ்வரன், உத்தமபாளையம்.
சேதம் அடைந்த சாலை
பழனி இட்டேரி சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், பழனி.
திருடர்கள் தொல்லை
திண்டுக்கல் நாகல்நகர் மென்டோன்சா காலனி, போடிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் அடிக்கடி தெருவிளக்குகள் எரிவதில்லை. அதை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டி விடுகின்றனர். திருடர்கள் தொல்லையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே தெருவிளக்குகள் தினமும் எரிவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, நள்ளிரவில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். -அய்யப்பன், நாகல்நகர்.
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.