'தினத்தந்தி' புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வேகத்தடை அமைக்க வேண்டும்
பழனி திருநகர் திண்டுக்கல் மெயின் ரோட்டில் வேகத்தடை இல்லை. இந்த மெயின் ரோட்டில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் சாலையை கடக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் முதியவர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், பழனி.
10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு
திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள கடைகள், ஒட்டல்கள் என அனைத்து இடங்களிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே 10 ரூபாய் நாணயங்களை கடைகள், வங்கிகளில் வாங்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆதி, திண்டுக்கல்.
சாலையில் தேங்கும் மழைநீர்
திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரம் ராஜலட்சுமி நகரில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் இந்த சாலையை கடந்து தான் வெளிஇடங்களுக்கு செல்ல வேண்டும். மழைநீர் தேங்கி குளம் போல் உள்ளதால் சாலையில் உள்ள மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், ராஜலட்சுமிநகர்.
தோல் கழிவுகளால் துர்நாற்றம்
திண்டுக்கல்லை அடுத்த பொன்மாந்துறை பகுதிகளில் உள்ள சாலைகளில் தோல் கழிவுநீர் ஆறு போல் ஓடுகிறது. இதனால் வாகனத்திலோ, நடந்தோ செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே சாலைகளில் தோல் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், பொன்மாந்துறை.
மூடப்படாத பள்ளத்தால் விபத்து அபாயம்
ஆண்டிப்பட்டி ஒன்றியம் அண்ணாநகர் முதல் துரைச்சாமிபுரம் வரை சாலையின் அடியில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டது. இதற்காக சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளம் இன்னும் மூடப்படாமல் உள்ளது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை உடனே மூட வேண்டும்.
-கிராம மக்கள், ஆண்டிப்பட்டி.
குண்டும், குழியுமான சாலை
திண்டுக்கல்லை அடுத்த அணைப்பட்டி வைகை ஆற்றை இணைக்கும் வகையில் உள்ள சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும். -ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி.
சுகாதாரமற்ற கழிப்பறை
போடி நகராட்சியில் உள்ள பொதுக்கழிப்பிடங்கள் சுகாதாரமாக இல்லை. இந்த கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிப்பறையில் முறையான தண்ணீர் வசதி இல்லை. எனவே பொதுக்கழிப்பறையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தெருவாசிகள், போடி.
மேற்கூரை இல்லாத வாகன நிறுத்தம்
கெங்குவார்பட்டி காட்ரோட்டில் இரு சக்கர வாகன நிறுத்தம் இருக்கிறது. இந்த இரு சக்கர வாகன நிறுத்தத்தில் மேற்கூரை இல்லை. இதனால் இரு சக்கர வாகனங்கள் கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் கிடக்கின்றன. மேலும் இரு சக்கர வாகனங்களும் அடிக்கடி பழுதடைகிறது. எனவே வாகன நிறுத்தத்துக்கு மேற்கூரை அமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், கெங்குவார்பட்டி.
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வருசநாட்டில் இருந்து முருக்கோடை செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்போது குழிகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
-முருகன், வருசநாடு.
சாலையை ஆக்கிரமிக்கும் மாடுகள்
பெரியகுளம் நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளை மாடுகள் ஆக்கிரமிக்கின்றன. மேலும் அந்த வழியாக நடந்து செல்பவர்களையும் அச்சுறுத்தும் வகையில் செயல்படுகின்றன. மாடுகள் சாலையை ஆக்கிரமிப்பதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
-ராஜா, பெரியகுளம்.
-----------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
---------------