'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஈரோடு

சுத்தப்படுத்தப்படுமா?

சத்தியமங்கலம் நகராட்சி கோவிந்தராஜபுரம் காலனி பகுதியில் (25-வது வார்டு) சாக்கடை நீர் செல்ல முடியாமல் தேங்கியுள்ளது. கழிவுகள் தேங்கியுள்ளதல் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல நகராட்சி அதிகாரிகள் உடனே கோவிந்தராஜபுரம் காலனியில் உள்ள சாக்கடையை சுத்தப்படுத்த ஆவன செய்வார்களா?

காமேஷ், சத்தி

செடி-கொடிகள் அகற்றப்படுமா?

அந்தியூரில் இருந்து பவானி செல்லும் ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஒரு மின் கம்பத்தில் செடிகள் வளர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் சுற்றியுள்ளன. தற்போது அந்த பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. யாராவது கம்பத்தை சுற்றியுள்ள செடி-கொடிகளை தெரியாமல் தொட்டுவிட்டால் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே மின்வாரிய பணியாளர்கள் மின்கம்பத்தை சுற்றியுள்ள செடி-கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயச்சந்திரன், அந்தியூர்

குண்டும்-குழியுமான ரோடு

ஈரோடு 18-வது வார்டில் (புதிய வார்டு 9) ஈகிள் கார்டன், விசுவநாத நகர், கேஜி கார்டன் ஆகிய குடியிருப்புகள் உள்ளன. சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்கு வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 10 ஆண்டுகளாக சாலை பராமரிப்பின்றி குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாக்கடைக்காக தோண்டப்பட்ட பெரிய குழியும் மூடப்படவில்லை. இரவு நேரத்தில் குழி இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குண்டும்-குழியுமான ரோட்டை சீரமைத்து, விபத்தை ஏற்படுத்தும் குழியையும் மூட வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு

வேகத்தடை வேண்டும்

ஊஞ்சலூர் பஸ் நிறுத்தத்தில் ரோடு வளைவாக உள்ளது. இதனால் தெற்கில் இருந்து வடக்காகவும், வடக்கில் இருந்து தெற்காகவும் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி ஊஞ்சலூர் பஸ் நிறுத்தத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடை அமைக்கவேண்டும்.

பொதுமக்கள், ஊஞ்சலூர்.

ஆபத்தான பள்ளம்

ஈரோடு பஸ்நிலையத்தில் இருந்து திருச்சி, கரூர், மதுரை செல்லும் பஸ்கள் வெளியே வரும் ரோட்டில் நாச்சியப்பா வீதியில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகிறார்கள். பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை மூடுவார்களா?

பொதுமக்கள், ஈரோடு.

உயரமான வேகத்தடை

ஈரோட்டில் இருந்து கொடுமுடி செல்லும் ரோட்டில் கொளாநல்லிக்கு அடுத்து கருங்கரடு என்ற இடத்தில் ரோட்டில் 2 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. 2 வேகத்தடைகளுமே உயரமாக உள்ளது. அதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே வேக்கதடையின் உயரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறைக்க ஆவன செய்ய வேண்டும்.

ஞானவேல், ஈரோடு.

ரோட்டோரம் குப்பை

ஈரோடு பெரியவலசு நால்ரோட்டில் இருந்து சம்பத் நகர் செல்லும் ரோட்டோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும்போது அதிக அளவில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டாமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரவும் நடவடிக்கை எடுப்பார்களா?

மெனிஷா, ஈரோடு.


Related Tags :
Next Story