'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஈரோடு

வர்ணம் பூச வேண்டும்

பவானி அருகே உள்ள சிங்கம்பேட்டை வழியாக பவானி- மேட்டூர் ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் சிங்கம்பேட்டை கேட் என்னும் இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வேகத்தடை மீது பிரதிபலிக்கும் தன்மை கொண்ட வர்ணம் பூசப்படவில்லை. மேலும் வேகத்தடை இருப்பதை குறிக்கும் வகையில் அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் அந்த பகுதி வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே வேகத்தடையில் பிரதிபலிக்கும் தன்மை கொண்ட வர்ணம் பூச நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சிங்கம்பேட்டை கேட்.

பராமரிப்பின்றி காணப்படும் நூலகம்

அந்தியூா் அருகே பட்லூாில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நூலகம் அமைக்கப்பட்டது. இங்கு அந்த பகுதியை சோ்ந்த பெண்களும், இளைஞா்களும் வந்து தினமும் படித்துவிட்டு செல்கிறாா்கள். தற்போது நூலகம் பராமாிப்பின்றி காணப்படுகிறது. சுவா்கள் விாிசல் விழுந்து உள்ளது. இதனால் நூலகத்துக்கு வர வாசகர்கள் அச்சப்படுகிறாா்கள். உடனே நூலகத்தை பராமரிக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஜய்பிரசாந்த், பட்லூா்.

வெளியேறும் கழிவுநீர்

ஈரோடு தண்ணீர்பந்தல்பாளையம் பழைய மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே அர்ஜூனா நகர் உள்ளது. இங்குள்ள பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்ல சிரமமாக உள்ளது. உடனே பாதாள சாக்கடை உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.ஏ.நாகராஜன், அர்ஜூனா நகர், தண்ணீர்பந்தல்பாளையம்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கோபி நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் உள்ள மாதேஸ்வரன் கோவில் வீதியின் கடைசியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

விஸ்வம், கோபி.

அகற்றப்படுமா?

கோபியில் இருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் கரட்டூர் பிரிவு ரோடு வருகிறது. அந்த ரோட்டில் 3-க்கும் மேற்பட்ட இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் குப்பைகள் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையிலும் உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும்.

பொதுமக்கள், கோபி.


Related Tags :
Next Story