'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஈரோடு

தேங்கி நிற்கும் கழிவுநீர்

அந்தியூர் அருகே சின்னதம்பிபாளையம் ஊராட்சி தாசரியூர் காலனி பகுதியில் உள்ள சாக்கடை வடிகாலில் இருந்து கழிவுநீர் வெளியேறி அந்த பகுதியில் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காமல் நிற்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சின்னதம்பிபாளையம்.

வேகத்தடை உயரம் குறைக்கப்படுமா?

ஈரோட்டை அடுத்த திண்டலில் பெருந்துறை சாலையில் இருந்து தெற்குபள்ளம் பகுதிக்கு செல்லும் சாலையில் தனியார் பள்ளிக்கூடத்துக்கு அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளாஸ்டிக் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் வேகத்தடை உயரமாக இருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து செல்கிறார்கள். எனவே வேகத்தடையின் உயரத்தை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திண்டல்.

மூடப்படாத தொட்டி

கோபியில் இருந்து ஈரோடு செல்லும் மெயின் ரோட்டில் கருக்கம்பாளி ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் ஒரு தனியார் பள்ளியின் அருகில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தொட்டியின் மேல் கான்கிரீட் சிலாப்புகள் போடப்பட்டு மூடப்பட்டு உள்ளது. ஆனால் தொட்டி முழுமையாக மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் தொட்டிக்குள் தவறி விழுந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே தொட்டியின் மேல் பகுதியில் கான்கிரீட் சிலாப்பு போட்டு மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

குவிந்துள்ள குப்பைகள்

கோபியில் இருந்து கருக்கம்பாளி செல்லும் ரோட்டில் மயானம் உள்ளது. இந்த மயானத்தின் அருகே சாலையோரம் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

பஸ் வசதி

டி.என்.பாளையத்தில் இருந்து கள்ளிப்பட்டி, அத்தாணி வழியாக அந்தியூர், வெள்ளித்திருப்பூர் வரை அரசு டவுன் பஸ் ஒன்று இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழியாக தினமும் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்து வந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள் பலர் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், டி.என்.பாளையம்.

மின்விளக்குகள் வேண்டும்

சென்னிமலை அறச்சலூர் ரோட்டில் உள்ள பொதுமயானம் முறையாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. இங்கு மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இதை தடுக்க மயானத்தை பராமரித்து அங்கு மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.துரைராஜ், சென்னிமலை.


Related Tags :
Next Story