'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஈரோடு

தார்சாலை அமைக்க வேண்டும்

பெருந்துறையை அடுத்த சீனாபுரம் அருகே உள்ள காங்கிரசம்புதூரில் இருந்து கீழேரிபாளையம் வரை செல்லும் ரோட்டில் கற்கள் பெயர்ந்து பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த ரோட்டின் வழியாக பாதசாரிகள், வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த ரோட்டில் செல்லும் போது தவறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே அங்கு தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காங்கிரசம்புதூர்.

தெருவிளக்கு ஒளிருமா?

சென்னிமலை அருகே உள்ள வரப்பாளையம் ஊராட்சியில் கடந்த பல மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்ல பெண்கள், சிறுவர், சிறுமிகள் அச்சப்படுகிறார்கள். உடனே தெருவிளக்கு ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கொங்கம்பாளையம்.

குப்பை அள்ளப்படுமா?

கோபி மாதேஸ்வரன் கோவில் பகுதியில் இருந்து நஞ்ச கவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

தேங்கிநிற்கும் மழை நீர்

டி.என்.பாளையம் அண்ணா சிலை பஸ் நிறுத்தம் அருகே நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை அருகே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள் பஸ் ஏறும்போது சிரமம் ஏற்படுகிறது. மேலும் அந்த பஸ் நிறுத்தம் அருகில் சாய்ந்து விழும் நிலையில் மரம் ஒன்றும் உள்ளது. எனவே பஸ் நிறுத்தம் அருகில் மழை நீர் தேங்கி நிற்கும் தாழ்வான பகுதியில் மண்போட்டு நிரப்ப வேண்டும். மேலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரத்தை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், டி.என்.பாளையம்.

வேகத்தடை வேண்டும்

பங்களாப்புதூரில் சத்தியமங்கலம்- அத்தாணி ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். சத்தியமங்கலம்- அத்தாணி சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. வாகனங்கள் வேகமாக வருவதால் மாணவ- மாணவிகள் சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளிக்கூடம் அருகே சத்தியமங்கலம்- அத்தாணி சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பங்களாப்புதூர்.

சுகாதாரக்கேடு

கோபி டவுனில் இருந்து மின் மயானம் செல்லும் ரோட்டில் சின்ன வாய்க்கால் கரை வருகிறது. அந்தக் கரைப்பகுதியில் சாலையோரமாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் வயல்களுக்கு விவசாயிகள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் இந்த குப்பையால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே குப்பையை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

போக்குவரத்துக்கு இடையூறு

அந்தியூர் சத்தி ரோட்டில் உள்ள ஒன்றிய அலுவலகம் பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி இந்த மின் கம்பத்தை இடமாற்றம் செய்து தர சம்மந்தப்பட்ட துறைஅதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், அந்தியூர்.


Related Tags :
Next Story