'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஈரோடு

குவிந்து கிடக்கும் குப்பை

கோபியில் இருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் கரட்டூர் பிரிவு பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மீது குப்பையில் இருந்து தூசு பறந்து வந்து விழுகிறது. மேலும் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றமும் வீசுகிறது. எனவே குப்பையை அள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.


ஆற்றுநீர் வினியோகிக்கப்படுமா?

அந்தியூர் அருகே உள்ள அண்ணாமடுவு, பவானி ரோடு, கரைமேடு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட ஆற்று குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக ஆற்று குடிநீர் கிடைக்கவில்லை. எனவே ஆற்றுக்குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

ராமசாமி, அந்தியூர்.

சுகாதார சீர்கேடு

பட்லூர் நால்ரோடு பகுதியில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் காற்று பலமாக வீசும்போது குப்பைகள் பறந்து வந்து ரோட்டில் விழுவதுடன், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீதும் விழுந்து விடுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி குப்பைகளை அகற்றி அந்த பகுதியை சுத்தமாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சச்சிதானந்தம், பட்லூர்.

குண்டும்-குழியுமான சாலை

ஈரோடு வீரப்பன்சத்திரம் சிதம்பரனார் வீதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி கோட்டை குடிநீருக்காக ரோட்டில் குழிகள் தோண்டினார்கள். பின்னர் அந்த குழியை மூடிவிட்டனர். ஆனால் அந்த ரோடு குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் இந்த ரோட்டில் செல்லமுடியவில்லை. எனவே குண்டும்-குழியுமான சாலையை சரிசெய்ய வேண்டும்.

சுரேந்தர், ஈரோடு.

ரோட்டில் செல்லும் சாக்கடை நீர்

ஈரோடு நசியனூர் சாமிக்கவுண்டன்பாளையம் பகுதியில் ரோட்டில் சாக்கடை கழிவுநீர் ஆறு போல் ஓடுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசு தொல்லை அதிகளவில் காணப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் சாக்கடை செல்வதற்கு சாக்கடை கழிவு நீர் கால்வாய் இல்லை. எனவே சாக்கடை கழிவுநீர் வடிகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் நசியனூர்.

பாராட்டு

ஈரோடு முனிசிபல் காலனி சத்யா வீதியில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடந்தன. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழ் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் சத்யா வீதியில் ஆங்காங்கே குவிந்து கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்தினர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்துக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

பொதுமக்கள், முனிசிபல் காலனி


Related Tags :
Next Story