'தினத்தந்தி' செய்தி எதிரொலி:தலைவாசல் கூட்டுறவு சங்கத்தில் உலர்களம் அமைக்கும் பணியை தொடங்க அதிகாரிகள் ஆய்வு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக தலைவாசல் கூட்டுறவு சங்கத்தில் உலர்களம் அமைக்கும் பணியை தொடங்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தலைவாசல்,
தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நெல் கொள்முதல் நிலையம் இந்த ஆண்டு திறக்கப்படாமல் உள்ளது. இங்கு வரும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக அடுக்குவதற்காக இந்த சங்க வளாகத்தில் கூட்டுறவு துறை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் உலர் களம்அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த உலர்களம் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு பணி முடிவடையாமல் உள்ளது. விரைந்து முடிக்குமாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது.
இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் கூட்டுறவு துறை துணை பதிவாளர் கந்தன், தலைவாசல் வட்டார கூட்டுறவு துறை கள ஆய்வாளர் வில்லவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாதியில் நிறுத்தப்பட்ட உலர்கள பணியை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டனர். இந்த ஆய்வின் போது தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் விமலா தேவி, கூட்டுறவு சங்க செயலாளர் நடராஜன் மற்றும் கூட்டுறவு ஊழியர்கள் உடன் இருந்தனர்.