தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள்குறைகள் பற்றிய பதிவுகள்.

திருப்பத்தூர்



திறந்த நிலையில் இருக்கும் ஆள்துளை கிணறு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பேராயம்பட்டு கிராமம். இங்கு பள்ளிக்கூட தெருவில் கடந்த சில மாதங்களாக திறந்த நிலையில் ஆள்துளை கிணறு ஒன்று உள்ளது. இதை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயன்படாத ஆழ்துளை கிணற்றுக்கு மூடி போட்டு பாதுகாக்க வேண்டும்.

-சுப்பிரமணியம், தண்டராம்பட்டு.

பேனர் வைக்க தடை விதிக்கப்படுமா?

வாலாஜா பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் காந்தி சிலை உள்ளது. இதன் வழியாகத்தான் அனைத்து பஸ்களும் பஸ்நிலையத்துக்குள் செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். வாலாஜா மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் யாரும் மரணம் அடைந்தால் மரண அறிவிப்பு பேனர்களை பெரிது பெரிதாக அச்சிட்டு காந்தி சிலையை மறைத்து வைக்கின்றனர். காந்தி சிலையை மறைத்து பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும்.

-தேவன், வாலாஜா.

தெரு பெயர்களை மாற்ற வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி கிராமத்தில் 6 வார்டுகள் உள்ளன. அந்த வார்டு தெருக்களின் ெபயர்கள் அனைத்தும் சாதி பெயர்களை சார்ந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாதி பெயர்களை சார்ந்துள்ள தெருக்களின் ெபயர்களை தமிழ்வழி பெயர்களாக மாற்றி அமைக்க ேவண்டும்.

-கணேசன், கடலாடி.

பணிகளை இடையூறு இல்லாமல் செய்வார்களா?

ராணிப்ேபட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சி 12-வது வார்டில் தொகுப்பு வீடுகள் பகுதியில் உள்ள தெருவில் கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்கான மூலப் பொருட்களாக ஜல்லிக்கற்கள், எம்.சான்ட் ஆகியவற்றை நடு ரோட்டிலேேய கொட்டி சென்றுள்ளனர். இதனால் அந்த வழியாக செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். பணி அறிவிப்பு பலகை வைக்கவில்லை. அந்தப் பணிகள் மக்களுக்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ரா.இளவரசன், விளாப்பாக்கம்.

மின் கம்பம் மாற்றப்படுமா?

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அசோக் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தின் முன் இருக்கும் இரும்பு மின் கம்பம் மீது லாரி மோதியதில் மின் கம்பம் வளைந்து விழும் நிலையில் உள்ளது. அதிகாரிகள் பார்வையிட்டு சென்று பல மாதங்கள் ஆகியும் இது வரை மின்கம்பத்தை மாற்றவில்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கோபி அரக்கோணம்.

திறக்கப்படாத சுகாதார வளாகம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா கிளையூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. அங்கு ஒவ்வொரு அமாவாசை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்பாளை தரிசனம் செய்வார்கள். அங்கு ஒரு பொது சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. அதை பக்தர்களின் நலன் கருதி திறந்து பயன்பாட்டுக்கு விடுவார்களா?

-ஜெகநாதன், கடலாடி.

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய கட்டிடம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திரு.வி.க நகர் பாண்டியன் வீதியில் பால்கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வந்தது. பின்னர் இந்த சங்கம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு இந்த கட்டிடத்தை பராமரிக்காமல் விட்டுவிட்டார்கள். இதனால் கட்டிடத்தில் மரம், செடி வளர்ந்து, சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளாக காட்சியளிக்கிறது. எனவே கட்டிடத்தை பராமரிக்க வேண்டும் அல்லது இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

-தாயுமானவன், பேரணாம்பட்டு.

தெருவில் தேங்கும் கழிவுநீர்

திருப்பத்தூர் டவுன் கச்சேரி வீதியில் பாதாளசாக்கடை பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவடைந்த நிலையில் தெரிவில் சாக்கடைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே தெருவில் தேங்கும் கழிவுநீரை அப்புறப்படுத்தி, மீண்டும் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில், திருப்பத்தூர்.


Related Tags :
Next Story