'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் பரவி கிடக்கும் மண்
திண்டுக்கல் அரசு எம்.வி.எம். பெண்கள் கல்லூரி அருகே தாடிக்கொம்பு சாலையில் மண் பரவி கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலையில் பரவி கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்.
-ராமு, திண்டுக்கல்.
வீணாக செல்லும் குடிநீர்
பெரியகுளம் நகராட்சி தென்கரை தண்டுபாளையம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து குடிநீர் வெளியேறுகிறது. அவ்வாறு வெளியேறும் குடிநீர் வீணாக ஆற்றில் கலக்கிறது. மேலும் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் குடிநீர் மாசடையும் வாய்ப்பு உள்ளது. அதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மணிபாரதி, பெரியகுளம்.
திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு
திண்டுக்கல் பிஸ்மிநகரில் இரவு நேரங்களில் தெருவில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் இருந்து மர்ம நபர்கள் பெட்ரோலை திருடி செல்கின்றனர். இதுதவிர அவ்வப்போது இருசக்கர வாகன திருட்டும் நடக்கிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி திருட்டை தடுக்க வேண்டும்.
-அப்பாஸ்அலி, பிஸ்மிநகர்.
பள்ளி முன்பு வேகத்தடை அவசியம்
சின்னமனூரில் ஸ்ரீகிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியின் முன்புள்ள பிரதான சாலையில் வேகத்தடைகள் எதுவும் இல்லை. இந்த வழியாக வாகனங்கள் வேகமாக செல்வதால் மாணவர்கள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன்கருதி பள்ளி முன்பு வேகத்தடைகள் அமைப்பது அவசியம். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாரிச்சாமி, சின்னமனூர்.
அரசு மருத்துவமனையில் திறக்காத கழிப்பறை
சாணார்பட்டி அருகே கொசவபட்டி வட்டார அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநோயாளிகளின் பயன்பாட்டுக்காக கழிப்பறை கட்டப்பட்டது. அந்த கழிப்பறை இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் சிறுநீர் பரிசோதனைக்காக வரும் நோயாளிகள் உள்பட வெளிநோயாளிகள் அனைவரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே கழிப்பறையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
-சீனிவாசன், கோபால்பட்டி.