தினத்தந்தி புகார் பெட்டி.
தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்.
கூடுதல் கட்டணம் வசூல்
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து வரும் சூழ்நிலையில், வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரின் விலையும் கணிசமாக உயர்ந்து 1000 ரூபாயை தாண்டி விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கியாஸ் சிலிண்டர்களுக்கு டெலிவரி சார்ஜ் என்ற பெயரில் ரூ.60 முதல் ரூ.80 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன் - பெருவளையம்.
கட்டிட கழிவுகளால் வாகன ஓட்டிகள் அவதி
வேலூர் காட்பாடியில் இருந்து கழிஞ்சூர் செல்லும் மெயின் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக கட்டிட கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், குவிந்து கிடக்கும் கட்டிட கழிவுகளை அகற்றி மீண்டும் இங்கு கட்டிட கழிவுகளை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரன், காட்பாடி.
குடிநீர் வீணாவது தடுக்கப்படுமா?
வேலூர் மாநகராட்சி சலவன்பேட்டை பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டிக்கு பாலாற்றில் இருந்து தண்ணீர் ஏற்றப்படுகிறது. தண்ணீர் வரும் குழாயில், சலவன்பேட்டை ராமசாமி தெருப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாரத்தில் 5 நாட்கள் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும்போது, உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இனியாவது குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-அசோக்குமார், சலவன்பேட்டை.
கழிவுநீர் கால்வாய் கழிவை அகற்ற வேண்டும்
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட சட்டநாயக்கன் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து அகற்றப்படும் குப்பைகள் சாலையோரம் மக்கள் நடமாடும் பகுதியில் போடப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் மாலை நேரம் குழந்தைகள் பலர் விளையாடுகின்றனர். இதனால் அந்த குப்பைகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அந்த பகுதியில் கழிவு நீர் சில சமயங்களில் கால்வாயில் இருந்து வெளியே வந்து சாலையில் ஓடும் நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, திருவண்ணாமலை.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லிம்பூர் பி.கே.ஆர். தெருவில் நகராட்சி சார்பில் வீடுகள்தோறும் தினமும் குப்பைகள் சேகரிக்கப்படுவதில்லை. குப்பை சேகரிக்க வரும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பேட்டரி பொருத்தப்பட்ட வாகனத்தில் தெருவின் முனையில் நின்று கொள்கிறார்கள். இதனால் பொதுமக்கள் சிலர் குப்பைகளை தெருவில் கொட்டி வருகின்றனர். இதன் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே துப்புரவு பணியாளர்கள் வீடுகள்தோறும் தினமும் குப்பைகளை சேகரிக்க வேண்டும்.
-உம்மு மரியம், வாணியம்பாடி.
தெருவிளக்குகள் எரியவில்லை
வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த சோழவரம் ஆதிதிராவிடர் காலனியில் கடந்த ஒரு வாரமாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளதால் பெண்கள், குழந்தைகள் இரவு நேரங்களில் வெளியில் வர அச்சப்படுகிறார்கள். எனவே தெருவிளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-த.அரவிந்தன், சோழவரம்.
நிழற்கூடம் அமைக்க வேண்டும்
வேலூர்- காட்பாடி சாலை சி.எம்.சி. மருத்துவமனை அவுட் கேட் பகுதியில் தபால் நிலையம் உள்ளது. இதன் முன்பு இருந்த பயணிகள் நிழற்கூடத்தை சில வாரங்களுக்கு முன்பு இடித்து விட்டனர். இந்த நிழற்கூடத்தை ஏராளமான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். பள்ளி கல்லூரி முடியும் வேளையில் அதிகமான மாணவிகளும் இங்கு நின்று தான் பஸ்சில் ஏறி பயணம் செய்வார்கள். தற்போது நிழற்கூடம் இடிக்கப்பட்டதால் பஸ்சுக்காக வெயிலில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அதன் அருகே கழிவுநீர் கால்வாயும் அபாயகரமானதாக உள்ளது. அங்கு கழிவுநீர் தேங்குவதால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு கழிவுநீர் தேங்காத வகையில் கால்வாய் அமைத்து, நிழற்கூடத்தை மீண்டும் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினோத், வேலூர்.
கண்ணமங்கலம் கூட்ரோடானது 3 பகுதிகளில் இருந்து பஸ்கள் வரும் பகுதியாகும். இதனால் தினமும் ஏராளமான பயணிகள் இங்கிருந்து பயணம் செய்து வருகின்றனர். ஆனால் பயணிகள் நிழற்கூடம் இல்லாததால் பயணிகள் அனைவரும் வெயிலிலும், மழையிலும் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் அமைத்து தரவேண்டும்.
-சாந்தன், கண்ணமங்கலம்.
'தினத்தந்தி'க்கு நன்றி
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் நிரந்தர ஆதார் மையம் அமைக்க வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதன் எதிரொலியாக ஆலங்காயத்தில் நிரந்தர ஆதார் மையம் செயல்பட தொடங்கி உள்ளது. செய்தி விளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
-ஜெயபால், ஆலங்காயம்.